பூதூர் ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் திடீரென மூடல்; 20 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அவலம்: விவசாயிகள் வேதனை

மதுராந்தகம்: பூதூர் கிராமத்தில்  நெல் கொள்முதல் நிலையத்தை திடீரென மூடியதால், 20 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும்நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் பூதூர் ஊராட்சியில் உள்ள ஈசூர், சகாயநகர் ஆகிய கிராமங்கள் பாலாற்றங்கரையை ஒட்டியுள்ளது. இந்த கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாய தொழில் செய்து வருகின்றனர். இந்த கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் விவசாயம் செய்து அறுவடை செய்தனர்.

இந்நிலையில், பூதூர் ஊராட்சியில், அரசு திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.  விவசாயிகள் நெல்லை  கொள்முதல் செய்து வந்த நிலையில், நெல் கொள்முதல் செய்வது திடீர் என அங்கு நிறுத்தப்பட்டது. இதனால், 50க்கும் மேற்பட்ட விவசாயிகளின்  20 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது. இந்த பகுதியில் பெய்து வரும் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இங்கு உள்ள விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்யவேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், இந்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் உதவி மேலாளர் ஸ்ரீதர் நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது, அங்கு கூடியிருந்த விவசாயிகள் கூறியதாவது இந்த பகுதியில் கொட்டி வைத்துள்ள நெல் முழுவதும் மழையில் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விரைவில் இங்கு நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து கூறினர்.

Related Stories: