ராமர் வேடத்தில் நடிக்க ரூ120 கோடி சம்பளம் கேட்கும் பிரபாஸ்

மும்பை: பாலிவுட் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் திரைக்கு வர உள்ளது. ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் தான் ராமர். கீர்த்தி சனோன், சீதை வேடத்தில் நடிக்கிறார். ஆதிபுருஷ் படத்தில் நடிக்க பிரபாஸுக்கு ரூ100 கோடி சம்பளம் பேசப்பட்டது. இந்நிலையில் மேலும் ரூ20 கோடி வேண்டும் என்று அவர் கேட்டிருக்கிறாராம். பிரபாஸ் திடீர் என்று தன் சம்பளத்தை உயர்த்தியிருப்பது தயாரிப்பாளருக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

ஆதிபுருஷ் படத்தை ரூ500 கோடி பொருட்செலவில் எடுத்து வருகிறார்கள். படத்தை விளம்பரம் செய்ய மேலும் செலவாகும். பிரபாஸின் பிற படங்களை போன்றே இந்த படத்திலும் கிராபிக்ஸ் பணிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் தரப்படுகிறது. பிரபாஸ் கடைசியாக நடித்த ராதே ஷியாம் படம் படுதோல்வி அடைந்தது. இதனால் சம்பளத்தை ரூ100 கோடியிலிருந்து குறைத்துக்கொள்ள சொல்லி பிரபாஸை தயாரிப்பாளர் கேட்க இருந்தாராம். இதை அறிந்துதான் அவர் கேட்கும் முன் சம்பளத்தை அதிகமாக தரச் சொல்லி பிரபாஸ் கேட்கிறார் என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஆதிபுருஷ் தவிர்த்து கே.ஜி.எப். படம் இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். மேலும் அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் வாங்கா ரெட்டி மற்றும் மாருதி ஆகியோரின் இயக்கத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படத்திற்கு ராஜா டீலக்ஸ் என்று பெயர் வைத்துள்ளனர். அந்த படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்.

Related Stories: