×

செம்பரம்பாக்கம் ஏரியில் 4வது நாளாக உபரிநீர் திறப்பு: நீர்வரத்து குறைந்தும் பாதுகாப்பு கருதி நடவடிக்கை

சென்னை: நீர்வரத்து குறைந்த நிலையிலும் பாதுகாப்பு கருதி, தொடர்ந்து 4வது நாளாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் 23.50 அடிக்கு தண்ணீர் உள்ளது. கடந்த ஒரு மாதமாக பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டதால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் பெய்த கனமழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
 
இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 23 அடியை தாண்டியதால் பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் அனுப்புவது கடந்த 4 நாட்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. கிருஷ்ணா நீர் வரத்து மற்றும் தொடர்ந்து மழை பெய்ததால் 4 நாட்களுக்கு முன்பு முதல்கட்டமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 250 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. மழை நீடித்ததால் அடுத்த நாள் உபரிநீர் திறப்பு மேலும் 250 கனஅடி அதிகரிக்கப்பட்டது.
  இதனால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கனஅடி வீதம்  உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது மழை குறைந்ததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து முற்றிலும் நின்று போனது. ஆனாலும், ஏரியில் நீர் இருப்பு அளவு முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
 
அதாவது, மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கனஅடியில், நேற்று காலை நிலவரப்படி 3459 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. மொத்தமுள்ள 24 கனஅடியில் 23.30 கனஅடி அளவுக்கு நீர்மட்டம் உள்ளது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி, தொடர்ந்து 4வது நாளாக நேற்றும் 500 கனஅடி வீதம் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Sembarambakkam Lake , 4th day flood opening in Sembarambakkam Lake: Measures to reduce water level
× RELATED தலை, உடலை துண்டு துண்டாக வெட்டி...