×

டிவி, ஏசி, மிக்சி போன்றவை போல் புதிய கார்களுக்கும் `நட்சத்திர மதிப்பீடு’: ஒன்றிய அமைச்சர் அதிரடி அறிவிப்பு

புதுடெல்லி: விபத்துகளை தாங்கும் சக்தியை பொருத்து புதிய கார்களுக்கும் இனிமேல், ‘நட்சத்திர மதிப்பீடு’ வழங்கப்பட உள்ளதாக ஒன்றிய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். ஒன்றிய சாலைப் போக்குவரத்து அமைச்சராக நிதின் கட்கரி பொறுப்பேற்ற பிறகு, இத்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுதி வருகிறார். `பாஸ்ட் டேக்’ உள்ளிட்ட சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தும் முறை, பழைய வாகனங்களை அழித்தல், கரியமில வாயுவை குறைக்க எலக்ட்ரிக் வாகனங்களுக்கு கூடுதல் சலுகை என்பது தொடங்கி கார்களில் விபத்தை தடுக்க `ஏர்பேக்’ வசதியை கட்டாயமாக்கியது வரை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

இந்நிலையில், கார்களுக்கு நட்சத்திர மதிப்பீடு வழங்கும் புதிய திட்டத்தை அவர் அறிமுகம் செய்துள்ளார். மக்கள் தற்போது வாங்கும் எந்த பொருட்களையும் நட்சத்திர மதிப்பீட்டை (ஸ்டார் ரேட்டிங்) பார்த்தே வாங்குகின்றனர். உதாரணத்துக்கு ஏசி, மிக்சி, டிவி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதாக இருந்தாலும். , அதற்கு எத்தனை நட்சத்திரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்பதை பார்த்து வாங்குகின்றனர். அதேபோல், இனிமேல் கார்களுக்கும் இந்த நட்சத்திர மதிப்பெண் வழங்கப்பட உள்ளது. இது தொடர்பாக கட்கரி நேற்று வெளியிட்ட தொடர் டிவிட்டர் பதிவில், `கார் பயன்படுத்துபவர்களின் நலனை கருத்தில் கொண்டு, ‘பாரத் புதிய கார் மதிப்பீடு,’ எனப்படும் ‘பாரத் என்சிஏபி’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதில், கார் உற்பத்தியாளர்கள் இடையே ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிக்கும் வகையில், கார்களின் செயல்பாட்டின் அடிப்படையில் ‘ஸ்டார் ரேட்டிங்’ வழங்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான வரைவு பொது சட்டவிதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விபத்துகளை சம்பந்தப்பட்ட வாகனங்கள் எந்தளவுக்கு தாங்குகின்றன என்பதை பொருத்து, இந்திய கார்களுக்கு ஸ்டார் ரேட்டிங் வழங்கப்பட உள்ளது. இந்த விபத்து சோதனையானது சர்வதேச விதிகளின்படி, அதே நேரம், அமலில் உள்ள இந்திய சட்ட விதிகளுக்குட்பட்டு நடத்தப்படும். இதன் மூலம், காரில் பயணிப்பவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களின் ஏற்றுமதி தரமும் உயரும்,’ என்று பதிவிட்டுள்ளார்.

Tags : Mixi , `Star rating 'for new cars like TV, AC, Mixi etc: Union Minister Action Announcement
× RELATED குளத்தூர் வாக்குசாவடியில் சுயேட்சை வேட்பாளர் தர்ணா