டாஸ்மாக் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த திட்டம் வகுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: டாஸ்மாக் காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்துவது தொடர்பாக திட்டம் வகுக்க தமிழகஅரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கொடைக்கானல், நீலகிரி உள்ளிட்ட மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள், குறிப்பாக குடிமகன்கள் காலி மதுபாட்டில்களை வனப்பகுதிகளில் வீசி செல்வது வழக்கமாக உள்ளது. உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் இத்தகைய நடவடிக்கையால் சுழல் பாதிக்கப்படுகின்றது. மேலும் வனப்பகுதியில் குடித்துவிட்டு உடைந்து போடப்படும் மதுபாட்டில் கண்ணாடி  துண்டுகள் யானை உள்ளிட்ட வன உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இது தொடர்பான வழக்கில், காலி மதுபாட்டில்களை தமிழகஅரசே கொள்முதல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் மலைப்பிரதேசங்களில் மட்டும், டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யும் மது பாட்டில்களில், ஈசி 10 என்னும் ஸ்டிக்கர் ஒட்டி 10 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.  இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காலி பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திரும்ப கொடுத்து 10 ரூபாயை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

மேலும் இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் கொண்டுவருவது குறித்து தமிழகஅரசு ஆலோசிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில், டாஸ்மாக்  காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க தமிழகஅரசுக்கு உயர்நீதிமன்றம்உத்தரவிட்ட நீதிபதிகள், சுற்றுச்சூழல் பாதிப்பை சரிசெய்ய வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது. இதுதொடர்பான திட்டத்தை வகுத்து ஜூலை 15-க்குள் சமர்ப்பிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: