×

சத்தியமங்கலம் அருகே சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி பலி: விவசாயிகள் அச்சம்

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தை கன்று  குட்டியை கடித்துக்கொன்றதால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புதுப்பீர்கடவு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (58), விவசாயி. இவரது விவசாய தோட்டம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. சுப்புராஜ் தோட்டத்தில் 11 மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று இரவு வழக்கம்போல் தனது வீட்டின் முன்பு பசுமாடுகளை கட்டி வைத்துவிட்டு வீட்டில் தூங்கியுள்ளார்.

இன்று காலை எழுந்து பார்த்தபோது, ஒரு கன்று குட்டி கழுத்து மற்றும் வால் பகுதியில் பலத்த ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து உடனடியாக பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் அப்பகுதியில் சிறுத்தையின் கால் தடம் பதிவானதை கண்டுபிடித்தனர்.

இதைத்தொடர்ந்து இழப்பீடு வழங்குவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக அப்பகுதியில் சிறுத்தை வெள்ளாடு, பசுமாடு மற்றும் காவல் நாய் உள்ளிட்ட கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடுவதாகவும், எனவே வனத்தை விட்டு வெளியேறும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Satyamangalam , Satyamangalam, a calf killed by a leopard, farmers fear
× RELATED ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே...