×

காட்பாடி அருகே பல்லவர் கால அய்யனார் சிற்பம் கண்டெடுப்பு

வேலூர்: காட்பாடி அருகே பல்லவர் கால அய்யனார் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள டி.கே.புரம் கிராமத்தில் கல்லில் செதுக்கப்பட்ட நிலையில் புடைப்பு சிற்பம் ஒன்று இருப்பதாக வேலூரை சேர்ந்த நாணய சேகரிப்பாளர் தமிழ்வாணனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் அங்கு சென்று பார்வையிட்டார். அப்போது அந்த சிற்பம் 8ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிலை என்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் கூறியதாவது:
அய்யனார் ஒரு நாட்டுப்புறக் காவல் தெய்வம். பழங்காலம் தொட்டே அய்யனார் வழிபாடு தமிழர் இடையே இருந்து வருகிறது. அய்யனார் வழிபாட்டைக் குலதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர்களிலும் காவல் தெய்வமாக வழிபடுகின்றனர். இந்த அய்யனார் தமிழர்களின் மூதாதையராக இருக்கலாம். இவர் இன்றைய இந்து மதமாக அறியப்படும் மத கடவுள் இல்லை. இவர் தமிழரின் தலைவராக இருந்தவராக இருக்கலாம். கம்பீரமான தோற்றத்துடன் கையில் அரிவாள் வைத்திருப்பார். பெரிய பெரிய குதிரை சிலைகள் அய்யனார் கோயில்களில் இருக்கும். பொதுவாக வெட்டவெளியில், காட்டுக்குள் கோயில் அமைதிருக்கும்.

அய்யனார் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி அமர்ந்திருப்பார். இளைஞரைப் போன்றவர். கிரீடம் அணிந்திருப்பார். வலது காதில் குழையும் இடது காதில் குண்டலமும் அணிந்திருப்பார். மற்றும் கடவுளுக்கான அனைத்து ஆபரணங்களையும் அணிந்திருப்பார். சந்தனம் பூசியிருப்பார். வலது கையில் தண்டம் அல்லது தடி வைத்திருப்பார். இடது கையை இடது காலின் மீது சார்த்தியது போல் வைத்திருப்பார், இடதுகாலை மடித்து பீடத்தின் மீது வைத்துக்கொண்டு வலது காலை கீழே தொங்கவிட்டிருப்பார். அய்யனாரின் பரிவாரத் தெய்வங்களில் ஒன்றான கருப்பர் காவல் தெய்வமாவார். இவர் கையில் அரிவாளுடன் வெள்ளைக் குதிரையில் ஏறி, நாய் உடன் வர, ஊரை வலம் வந்து காவல் செய்வார்.

அய்யனார் சிலை பல இடங்களில் கிடைக்கப்பெற்றுள்ளது. ஆனால் இந்த சிலை மிகவும் விசேஷமானது. கையில் செங்கோல் (தண்டலம்) ஏந்தி உள்ளார். இந்த பகுதியின் பெயர் தண்டலகிருஷ்ணாபுரம் என்பதால் சிலைக்கும், கிராமத்துக்கும் தொடர்பு இருக்கலாம். சில வரலாற்று ஆய்வாளர்களிடம் இதை காண்பித்து கேட்டபோது பிற்கால பல்லவர்கள் அல்லது சோழர்காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். இதை முழுமையாக ஆய்வு செய்தால் பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Ayyanar ,Katpadi , Katpadi, Pallava period Ayyanar sculpture, invention
× RELATED ஆயக்காரன்புலம் கலீதீர்த்த ஐயனார் ஆலய தங்க குதிரை திருவிழா