×

கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி     

* தனியா, கடலைப்பருப்பு, பெருங்காயம், மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை கொஞ்சம் எண்ணெயில் வறுத்து தேங்காய் துருவி பால் பிழிந்து, கொதித்த சாம்பாரில் ஊற்றிப் பொடியைத் தூவி இறக்கவும். மணமாக இருக்கும்.

* ஜவ்வரிசி பாயசம் செய்யும்பொழுது இரண்டு ஸ்பூன் வறுத்த கோதுமை மாவையும் பாலில் கரைத்து ஊற்றினால், பாயசம் கெட்டியாகவும் மணமாகவும் இருக்கும்.

* வெண்பொங்கல், கலந்த சாதம், புலாவ், பிரியாணி போன்றவற்றில் காரம் அதிகமாகிவிட்டால் சூடான பால், இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்தால் காரம் குறைந்துவிடும்.
- ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.

* எந்த சாம்பார் செய்வதாக இருந்தாலும் சின்ன வெங்காயத்தை அரைத்து சாம்பாரில் சேர்த்து இறக்கவும். சாம்பார் மணக்கும். வெங்காய சாம்பார் செய்வதானாலும் இப்படிக் கடைசியில் அரைத்து விடலாம்.

* கேரட், பூசணி அல்வா செய்யும்போது 1 கிலோவிற்கு, 250 கிராம் கோவா, 100 கிராம் மைதா மாவை நெய்யில் வறுத்து சேர்த்தால், ருசியும், நிறமும் பிரமாதமாக இருக்கும்.
- குப்பம்மாள், கிருஷ்ணகிரி.

* சமையல் அறையில் ஈ, எறும்பு பிரச்னை இருந்தால் அந்த இடங்களில் காய்ந்த வெள்ளரிக்காய் தோலைப் போட்டு வைக்கலாம்.

* முட்டை ஆம்லெட் போடும்போது ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயைச் சேர்த்தால் ருசியும், மணமும் கூடும்.

* குளிர்சாதனப் பெட்டியை பச்சைக் கற்பூரம் கலந்த தண்ணீரைக்கொண்டு சுத்தம் செய்தால் எந்த பூச்சியும் அண்டாது.

* பாட்டிலிலோ, டப்பாவிலோ உள்ள இன்ஸ்டன்ட் காபி தூள் கெட்டியாகி விடாமல் இருக்க அதனுள் ஐந்து அரிசியைப் போட்டு வைக்கலாம்.
- கஸ்தூரி லோகநாதன், சென்னை.

* பாசிப்பருப்பை வேக வைத்து தேங்காய்த்துருவல், வெல்லத்தூள், ஏலக்காய்ப் பொடி சேர்த்துக் கலந்து, இட்லி மாவில் உள்ளே வைத்து வேக வைத்து சாப்பிட, புரதச்சத்தும், சுவையும் நிறைந்த, வித்தியாசமான இட்லி தயார். இதற்கு கெட்டித்தேங்காய்ப்பால் ஏற்றதாக இருக்கும்.

* முற்றிய வெண்டைக்காயை வீணாக்காமல்,  சீரகம், மஞ்சள் தூள் சிறிதளவு கல் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்து ‘சூப்’ ஆகக் குடிக்கலாம்.

* ஆப்பத்துக்கு மாவு அரைக்கும்போது, இளநீரின் வழுக்கைப் பகுதியை சேர்த்து அரைத்து செய்தால், மிக அதிக சுவையுடன் இருக்கும்.

* மரவள்ளிக்கிழங்கைத் துருவி உப்பு தேங்காய்த்துருவல் சேர்த்து இட்லித்தட்டில் வைத்து வேக வைத்து சாப்பிட சுவையான கிழங்குப்புட்டு தயார்.
- எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.

* பூரி, சப்பாத்தி மாவில் கொஞ்சம் தயிர் சேர்த்துப் பிசைந்தால் பூரி மிருதுவாக இருக்கும்.

* பாக்கெட் பாலை வாங்கிக் காய்ச்சாமல் உறை ஊற்றினால் தயிர் மிகவும் கெட்டியாகவும் நல்ல வாசனையாகவும் இருக்கும்.

* வெங்காயம், தக்காளி, பூண்டு அரைத்து விழுதாக்கி சப்பாத்தி மாவுடன் சேர்த்துப் பிசைந்து மசாலா சப்பாத்தி செய்ய அருமையாக இருக்கும்.
- ஆர்.பூஜா, சென்னை.

* கோதுமை, மைதா மாவுகளைப் பயன்படுத்தி பூரி, சப்பாத்தி செய்யும்போது, மாவு தேவையான அளவு இல்லை என்று தெரிந்தால் உருளைக்கிழங்கை வேக வைத்து, அதை கோதுமை அல்லது மைதாவுடன் சேர்த்துப் பிசைந்து, பூரி, சப்பாத்தி செய்யலாம்.
- ச.லெட்சுமி, செங்கோட்டை.

* பருப்புப்பொடியுடன் கொஞ்சம் கசகசாவையும் சேர்த்துக்கொண்டால் குழம்பு கூட்டு கெட்டியாக இருக்கும்.

* கடலை எண்ணெய் கெடாமல் இருக்க அதில் கொஞ்சம் புளியைப் போட்டு வைத்தால் கெடாமல் இருக்கும்.

* உப்பு ஜாடியில் நான்கைந்து அரிசியைப்போட்டு வைத்தால் உப்பில் தண்ணீர் விடாது.
- க. நாகமுத்து, திண்டுக்கல்.

* காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய் இவற்றை மிக்ஸியில் அரைத்து, மோரில் கலந்து, உப்பு, மஞ்சள் தூள் கொதிக்க வைத்து, பொங்கி வரும் ேபாது, மாம்பழ சாற்றை சேர்த்து, கறிவேப்பிலை, கடுகு தாளிக்கவும். புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையான மோர்க்குழம்பு.

* பசலைக்கீரையை சிறிது தண்ணீர் தெளித்து வேக விட்டு மசித்து, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கி, மசித்த கீரையை சேர்க்கவும். கடைசியாக தயிர் சேர்த்து கிளறி இறக்கினால், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சுவையான சப்ஜி தயார்.
- இந்திராணி, சென்னை.

* மிளகாய் பொடி அரைக்கும்போது கறிவேப்பிலை, புதினா இவைகளை உலர்த்தி சேர்த்து அரைத்தால் மிளகாய் பொடி வாசனையாக இருக்கும். குழம்பும் கமகமவென மணக்கும்.

* புளியை வெயிலில் உலர்த்தி, உப்பு தண்ணீரை தெளித்து, கோலில் அடித்தால் புளியின் உட்புறம் உள்ள வெண்மையான தூளும் ஒன்றிரண்டு கொட்டைகளும் விழுந்துவிடும். வண்டு, புழுக்கள் சேராது.

* குச்சிக்கிழங்கை பொடியாக நறுக்கி, ஊறின கடலைப்பருப்புடன் சேர்த்து அரைத்து வடை செய்தால் மொறுமொறு என்றும் சுவையாகவும் இருக்கும்.
- சு.கண்ணகி, வேலூர்.

* ஆப்பிள், பேரிக்காய், வாழைப்பழம் பழங்கள் நறுக்கிய பிறகு நிறம் மாறாமல் இருக்க எலுமிச்சம்பழம் சாறு கலந்து வைக்க வேண்டும்.

* காரக்குழம்பு வைக்கும்போது புளிக்குப் பதில் தக்காளிப் பழங்களைப் போட்டு வைத்தால் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.

* ஏலக்காய், கிராம்பு மற்றும் மிளகு போன்றவற்றை ஒன்றாக காற்றுப் புகாத டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.
- எம்.ஏ.நிவேதா, திருச்சி.

* சப்பாத்தியோ, பூரியோ செய்யும்போது கோதுமை மாவில் சாதம் வடித்த நீர் சேர்த்து மாவைப் பிசைந்து செய்தால், ருசியாக இருக்கும்.

* ரவா, மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போடலாம்.

* பொரியல் செய்யும்போது உப்பு, காரம் அதிகமாகி விட்டால் உலர்ந்த பிரெட் அல்லது ரஸ்கைப் பொடித்துத் தூவினால் சரியாகிவிடும்.
- கவிதா சரவணன், ஸ்ரீரங்கம்.

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!