×

கடலூர் வெடி விபத்து பலி 4 ஆக உயர்வு தொழிற்சாலை உரிமையாளர்கள் கைது

கடலூர்: கடலூர் முதுநகர் அருகே பெரிய காரைக்காடு பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (36). இவர் தனது மனைவி வனிதா பெயரில், கடலூர் அருகே உள்ள எம்.புதூரில் நாட்டு வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்துள்ளார். நேற்று காலை இந்த தொழிற்சாலையில், ராஜி (34), சித்ரா (35), அம்பிகா, வசந்தா (45), ஜிந்தா (22), சத்யராஜ் (32) ஆகியோர் நாட்டு வெடிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று மதியம் ராஜியும், ஜிந்தாவும் சாப்பிடுவதற்காக வெளியே சென்றனர். அப்போது அந்த பட்டாசு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது சத்தியராஜ், சித்ரா, அம்பிகா ஆகிய 3 பேரும், சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்து கிடந்தனர். வசந்தா 85 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். போலீசார் அவரை மீட்டு, கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு வசந்தா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாட்டு வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உரிமையாளர்களான  மோகன்ராஜ் (36), அவரது மனைவி வனிதா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Cuddalore , Cuddalore blast, factory owners arrested
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை