×

இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள முத்துப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலக கட்டிடம் பழுதடைந்து அபாய நிலையில் உள்ளதால் அதனை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகில் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது. 29 ஊராட்சிகள் அடங்கிய இந்த அலுவலகத்தில் எந்த நேரமும் பரபரப்பாகவே இருக்கும். அந்தவகையில் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 29 ஊராட்சிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் பல்வேறு பணிகளுக்கு இங்கு வந்து செல்வது வழக்கம். இந்த வளாகத்தில் மேலும் வட்டார வளர்ச்சிதுறை மட்டும் அல்லாமல் அதைசார்ந்த பல்வேறு துறை அலுவலகமும் இதில் செயல் படுகிறது. வட்டார வளர்ச்சி அலுவலக கட்டிடங்களை முறையாக பராமரிக்கப்படாததால் பயன்பாட்டில் இல்லாத கட்டிடங்கள் போல தூசி, ஒட்டடை படிந்து பொலிவிழந்து காணப்படுகிறது.

மேலும் கட்டிடங்களும் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து பில்லர் மற்றும் சிலாப் கம்பிகள் வெளியில் தெரியும் நிலைமையில் உள்ளன. இதில் குறிப்பாக அலுவலகத்தின் நடுவில் உள்ள பழமையான கட்டிடம் கம்பீரமாக கட்சி அளித்தாலும் அதன் பல பகுதிகள் முறையாக பராமரிக்கப்படாததால் மழைநேரங்களில் தண்ணீர் தேங்கி கட்டிட உள்பகுதிக்கு சென்று சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியில் தெரிகிறது. இதில் முன்பகுதி கட்டிடத்தின் மாடிப்படிகள் கீழ்புறம் மற்றும் மேல்புறம் சிமெண்ட் பூச்சுகள் இடிந்து விழுந்து எலும்பு கூடாக உள்ளது. இதனால் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதுபோன்று பல்வேறு பகுதி தாங்கு பில்லர் தூண்களும் அதே நிலையில் உள்ளதால் கட்டிடம் உறுதி தன்மையை இழந்து வருகிறது.

இதனால் அலுவலகத்திற்கு வந்து செல்லும் மக்களுக்கும், அதேபோல் அலுவலக ஊழியர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் கட்டிடத்தில் மேல் மாடியில் மழை நேரத்தில் தண்ணீர் ஒழுகி வருகிறது. அதேபோல் அலுவலகம் சுற்றிலும் கட்டிடத்தின் சுவர் ஓரங்களில் தேவையற்ற பொருட்கள் குவியல் குவியலாக கிடப்பதால் கட்டிடத்தின் அஸ்திவாரமும் நம்பிக்கையற்ற நிலையில் உள்ளன. முத்துப்பேட்டை வட்டார வளர்ச்சி துறை அலுவலக அதிகாரிகள் அலுவலக கட்டிடங்களை சீரமைக்க வேண்டும். அல்லது இடித்து அகற்ற முன் வரவேண்டும். அதேபோல் எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ள மாடிப்படிகள் மற்றும் சேதமான தாங்கு பில்லர்களை அகற்றிவிட்டு புதியதாக அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Muthupet Regional Development Office , Regional development of Muthupet at risk of collapse Renovation of office building: Public demand
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...