×

திருவலம் பொன்னையாற்றில் சீரமைக்கப்பட்ட இரும்பு பாலத்தில் மீண்டும் பள்ளங்கள்: கனரக வாகனங்கள் செல்ல தடை செய்ய கோரிக்கை

திருவலம்: திருவலம் பொன்னையாற்றில் சீரமைக்கப்பட்ட இரும்பு பாலத்தின் சாலைப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்கவும்,பாலத்தில் கனரக வாகனங்களுக்கு தடை செய்யவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காட்பாடி தாலுகா திருவலம் பேரூராட்சி பொன்னையாற்றின் குறுக்கே ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட 85 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க ‘’ராஜேந்திரா இரும்பு பாலம்’’இந்திய வரலாற்றில் நினைவு சின்னமாக உள்ளது. இப்பாலம் நெடுஞ்சாலைத் துறையின் கட்டுபாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாலத்தின் உள்ள சாலையில் 12 பாலங்களுக்கு இடையேயான 11 இணைப்பு பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டு அதிலிருந்த கான்கீரிட் சிமெண்ட்,ஜல்லி கலவைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்து ஆபத்தான நிலையில் இருந்ததால் வாகன ஓட்டிகள் பாலத்தின் சாலையில் வாகனங்களை இயக்க பல்வேறு சிரமங்களை அடைந்து வந்தனர்.

இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த மார்ச் 14ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைதுறையினர் பாலத்தில் உள்ள சாலையின் இணைப்பு பகுதிகளில் ஏற்பட்டிருந்த விரிசல்களுக்கு தார்கலவை பூசி தற்காலிகமாக சீரமைத்தனர்.தொடர்ந்து பாலத்தின் சாலையில் ஏற்பட்டுள்ள விரிசல்களை நிரந்தரமாக சீரமைக்க வேண்டுமென மார்ச் 24ம் தேதி மீண்டும் தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.இதனையடுத்து நெடுஞ்சாலை துறையினர் நிரந்தரமாக பாலத்தின் சாலையில் ஏற்பட்டிருந்த விரிசல்களை தனியார் ஒப்பந்ததாரர் மூலம் சீரமைக்கும் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி முதல் பாலத்தில் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு அனைத்து வாகனங்களும் திருவலம் பேரூராட்சிக்குட்பட்ட பொன்னை கூட்ரோடு பகுதியில் உள்ள பொன்னையாற்று புறவழிச்சாலை பாலத்தின் வழியாக போக்குவரத்திற்கு வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், 12 பாலங்களுக்கான 11 இணைப்பு பகுதிகளில் இரும்பு சட்டங்கள் கம்பிகள் இணைப்புடன் புதைக்கப்பட்டு சிமென்ட் கான்கிரீட் தளம் அமைத்து தொடர்ந்து அதன்மீது தார்கலவைபூச்சு மூலம் சீரமைக்கும் பணிகள் மற்றும் பாலத்தின் சாலையில் இருந்த 36 சிறுவிரிசல்களுக்கும் தார்பூசி சீரமைக்கப்பட்டது.இதனையடுத்து வேலூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறையின் காட்பாடி உதவி கோட்டப்பொறியார் சுகந்தி தலைமையில் நெடுஞ்சாலை துறையினர் ஆய்விற்கு பின்பு கடந்த 11ம் தேதி முதல் பாலத்தில் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பாலத்தின் சாலைகளில் ஏற்பட்டிருந்த சிறுவிரிசல்களுக்கு போடப்பட்டிருந்த ஜல்லி, தார்கலவை பூச்சு சில இடங்களில் பெயர்ந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.இதனால் சைக்கிள் மற்றும் பைக்குகளில் சென்று வருபவர்கள் தடுமாறி செல்கின்றனர். மேலும் பாலத்தில் அதிக பாரங்களை ஏற்றி வரும் கனரக வாகனங்கள் செல்லாதபடி பாலத்தின் நுழைவு வாயில்களில் அதற்கான இரும்பு கம்பங்களை வைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Tiruvalam Ponnayar , Tiruvalam aligned in Ponnayar Back grooves in iron bridge: Demand for ban on heavy vehicles
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை