திருமண கொண்டாட்டத்தின்போது துப்பாக்கியால் மணமகன் சுட்டதில் நண்பர் பலி; உ.பி.யில் சோகம்

சோன்பத்ரா: உத்தரபிரதேசத்தில் திருமண கொண்டாட்டத்தின்போது துப்பாக்கியால் மணமகன் சுட்டதில் நண்பர் பரிதாபமாக இறந்தார். திருமண கொண்டாட்டம் சோகத்தில் முடிந்தது. உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டம் பிராம்நகரை சேர்ந்தவர் மணீஷ் மதேஷியா (25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது நேற்று திருமணம் நடந்தது. இதற்காக கோலாகலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மணமகன், மணமகள் வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் வந்திருந்ததால் திருமண நிகழ்ச்சி களைகட்டியிருந்தது.

மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். திருமணத்துக்கு பிறகு மணமகன் மணீஷ் மதேஷியாவை அவரது நண்பர்கள் அலங்கார வாகனத்தில் அமர வைத்து ஊர்வலமாக அழைத்து சென்றனர். அப்போது அவரது நண்பரான பாபுலால் யாதவ் (26), தன்னிடம் இருந்த துப்பாக்கியை மணீஷிடம் கொடுத்து வானத்தை நோக்கி சுடுமாறு கூறினார். உடனே அவரும் துப்பாக்கியை வாங்கி வானத்தை நோக்கி சுட்டார். எதிர்பாராதவிதமாக அந்த குண்டு, நண்பர் பாபுலால் யாதவின் தலையில் பாய்ந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் பாபுலால் சாய்ந்தார்.

திருமணத்துக்கு வந்திருவர்கள் அனைவரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். படுகாயமடைந்த பாபுலாலை உடனடியாக அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனையில், ஏற்கனவே அவர் இறந்துவிட்டது தெரிந்தது. பாபுலால் ராணுவத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாபுலால் யாதவின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து, மணமகன் மணீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபரீத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: