நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி தீவிரம் சாலையோர ஆக்கிரமிப்புகள், மரங்கள் அகற்றம்: ஜோலார்பேட்டையில் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டையில் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் மரங்கள் ஆகியவற்றை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி வருகின்றனர்.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியிலிருந்து ஊத்தங்கரை வரை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை பணி கடந்த 2020ல் சுமார் 300 கோடி மதிப்பீட்டில் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. மேலும் வாணியம்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை அருகே மேட்டு சக்கர குப்பம் வரை 90 சதவீதம் பணி முடிவடைந்துள்ளது. மேலும் ஜோலார்பேட்டை அடுத்த பக்ரிதக்கா பகுதியிலிருந்து திருப்பத்தூர் வரை 80 சதவீதம் பணி நடைபெற்று வருகிறது. வரும் 30ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்து ஜோலார்பேட்டை அருகே உள்ள ஆசிரியர் நகர் பகுதியில் தனியார் பள்ளி வளாகத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க இருப்பதாக உத்தேச தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், தமிழக முதல்வர் வருகையையொட்டி தேசிய நெடுஞ்சாலை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜோலார்பேட்டையில் உள்ள சந்தை கோடியூர் பகுதியிலிருந்து பக்ரிதக்கா வரை நான்கு வழி சாலை அமைப்பதற்கான விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலையோரங்களில் உள்ள மரங்கள் ஆக்கிரமிப்புகள் போன்றவற்றை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று சந்தை கோடியூர் பகுதியில் சாலை விரிவாக்க பணிக்கு சாலையோரம் இருந்த புளிய மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, புளியமரத்தை வெட்டி சாய்க்கும் போது சாலையோரம் இருந்த மின் கம்பி மீது மரம் சாய்ந்து விழுந்ததால் அருகிலிருந்த மின்கம்பம் உடைந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்தது. ஆனால், முன்னதாகவே மின்வாரியத் துறை அதிகாரிகள் மின்சப்ளையை துண்டித்து பணி மேற்கொள்ளப்பட்டதால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. பின்னர் சாலையில் விழுந்த மரங்களை ஜேசிபி இயந்திரம் மூலம் முழுவதுமாக அகற்றினர்.

இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் முறிந்து விழுந்த சம்பத்தையும் அருந்த மின்கம்பிகளை மின்வாரிய துறை அதிகாரிகள் புதிய மின் கம்பம் அமைத்து மின்னிணைப்பு வழங்கினர். இதனால் சந்தை கோடியூர் பகுதியில் சுமார் 3 மணி நேரம் மின் துண்டிப்பு ஏற்பட்டது. மேலும் சாலையோரங்களில் உள்ள மரங்களையும், ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் கட்டிடங்கள் போன்றவற்றை துறை அதிகாரிகள் மூலம் ஏற்கனவே சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கடிதம் வழங்கி அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நான்கு வழி சாலை அமைப்பதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருவதால் அகற்றப்படாத ஆக்கிரமிப்பு இடங்களை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி, சாலை விரிவாக்கம் செய்து நான்கு வழி சாலை அமைப்பதற்கான பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: