×

அனைத்து பள்ளிகளிலும் மேல்நிலைக் கல்வி மாணவர் சேர்க்கையின் போது, கட்டாயம் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்ற வேண்டும் : பள்ளிக்கல்வித்துறை

சென்னை : தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் மேல்நிலைக் கல்வி மாணவர்கள் சேர்க்கையின் போது, கட்டாயம் இட ஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20ம் தேதி வெளியானது.மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படுகிறது. இதையடுத்து 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை என்பது தமிழகம் முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், மாநில அதிகார வரம்பின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளிலும் மேல்நிலை வகுப்பில் மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அந்த சுற்றறிக்கையில், பொதுப் பிரிவு – 31%, எஸ்டி – 1%, எஸ்சி – 18% , SCA இருப்பின் அவர்களுக்கு 3% உள் இட ஒதுக்கீடு, எம்பிசி – 20%, பிசிஎம் – 3.5%, பிசி – 26.5% என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது, முதலில் பொதுப் பிரிவினருக்கான 31% இட ஒதுக்கீட்டுக்கு பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். குறிப்பாக 11ம் வகுப்பு சேர்க்கையில் ஒவ்வொரு பாடப்பிரிவில் இட ஒதுக்கீடு முறை கடைபிடிக்கவேண்டும். மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 31% இட ஒதுக்கீட்டுக்கான பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். அனைத்துப் பிரிவினருக்கும் ஏற்ற வகையில், பாகுபாடின்றி பட்டியல் தயாரிக்க வேண்டும்.மேல்நிலைப் பள்ளிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதா என்பதை கண்காணித்து, உறுதிப்படுத்த வேண்டும், என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu Matriculation, Schools, Admission, Compulsory, Reservation
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...