தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒற்றை தலைமைக்கு தலைவர் எடப்பாடி பழனிசாமிதான்: எஸ்.பி.வேலுமணி பேச்சு

சென்னை: அதிமுக தொண்டர்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒற்றைத் தலைமைக்கு தலைவர் எடப்பாடி பழனிசாமிதான் என்று எஸ்.பி.வேலுமணி கூறினார்.சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழுக்கூட்டத்தில் சட்டமன்ற அதிமுக கொறடா வேலுமணி நன்றி உரையாற்றி பேசியதாவது: அதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு ஏற்பட்ட தொண்டர்களின் எழுச்சி போல, ஜெயலலிதா காலத்தில் ஏற்பட்ட தொண்டர்களின் எழுச்சி போல இப்போது தமிழகம் முழுவதும் தொண்டர்களின் மத்தியிலே மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியவர் எடப்பாடி பழனிசாமி தான்.

கடந்த 9 நாட்களாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், அதிமுகவை எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று வழி நடத்தி வருபவர் எடப்பாடி பழனிசாமி தான் என்று பேசி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு, மக்கள் அங்கீகாரம் கொடுத்து விட்டனர். ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அதிமுகவை கட்டி காத்தவர். 4 ஆண்டுகள் ஆட்சியை நடத்தி மக்கள் விரும்பும் முதல்வராக இருந்தவர்.இந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிற அனைத்து நிர்வாகிகளுக்கும், பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை, எடப்பாடி பழனிசாமி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து தொண்டர்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒற்றைத் தலைமைக்கு தலைவர் எடப்பாடி பழனிசாமிதான். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: