×

ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு: பொதுக்குழுவில் பரபரப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தொடர்ந்து அவமதிக்கப்பட்டதால் முன்கூட்டியே கூட்டத்தை புறக்கணித்துவிட்டு புறப்பட்ட ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுக்குழுவில் அதிமுகவின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், அவர் அடுத்த பொதுக்குழு கூட்ட தேதியை அறிவித்து பேசி தன்னை அவைத்தலைவராக தேர்வு செய்ததற்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரையும் அவர் புறக்கணித்தார். இதனால், கூட்டம் முடிவதற்குள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் மேடையில் இருந்து கீழே இறங்கினார்கள்.
அப்போது, வைத்திலிங்கம் ‘இது சட்டத்திற்கு புறம்பான பொதுக்குழு’ என்று மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்து பேசினார்.

தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும் மேடையில் இருந்த மைக்கில் பேசுவதற்கு வந்தார். ஆனால், அங்கே இருந்த நிர்வாகிகளும், பாதுகாவலர்களும் அவரை பேச விடாமல் மேடையை விட்டு கீழே இறக்கினர். இதேபோல், ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராகவும், அவரை ‘வெளியே போ, வெளியே போ’ என்று எடப்பாடியின் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். அப்போது, ஓ.பன்னீர்செல்வத்தின் மீது தண்ணீர் பாட்டில்களும், காகிதங்களும் வீசப்பட்டது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பாதுகாவலர்கள் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை பாதுகாப்புடன் வெளியேற்றினர். மண்டபத்தின் வெளியே ஓபிஎஸ் வந்த வாகனத்தின் டயர்களும் பஞ்சர் செய்யப்பட்டதால் பரபரப்பு நிலவியது. பின்னர், மாற்று டயர் பொருத்தி வாகனத்தை இயக்கி ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மண்டபத்தை விட்டு வெளியேறினர்.

கண்கலங்கிய ஓபிஎஸ்
அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது பொதுச்செயலாளர் பதவிக்கு இணையானது. அந்த பதவியில் தான் தற்போது ஓ.பன்னீர்செல்வம் உள்ளார். இந்த பதவியை ஒழித்து விட்டுதான் பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வர வேண்டும் என்று எடப்பாடி அணியினர் கூறி வருகின்றனர். இந்த பிரச்னை கடந்த 10 நாட்களாக பூதாகரமாக வெடித்து வருகிறது. ஓபிஎஸ் தனது பிடியை விடாமல் தக்க வைக்க நினைக்கிறார். காரணம், ஒருங்கிணைப்பாளர் பதவி காலியானால், அதிமுக கட்சியில் ஓபிஎஸ் செல்லா காசாக மாறிவிடுவார். இது நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில் பிரதிபலித்தது. பொதுக்குழுவில் கலந்து கொண்ட அனைவருமே எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள்தான். ஓபிஎஸ் வந்ததில் இருந்தே அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

பலர் ‘துரோகி ஓபிஎஸ்’ என்று கோஷம் எழுப்பினர். வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் பொதுக்குழுவை புறக்கணித்துவிட்டு வெளியே சென்றார். அப்போதும் ஓபிஎஸ் வாகனத்தை சூழ்ந்து கொண்டு எடப்பாடி ஆதரவாளர்கள் கூச்சலிட்டனர். அப்போது, தன்னை அறியாமலேயே ஓபிஎஸ் கண் கலங்கினார். ஓபிஎஸ் வாகனத்தை கூட பொதுக்குழு வளாகத்தில் நிறுத்தவிடாமல், எடப்பாடி ஆதரவாளர்கள் விரட்டி விட்டது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஒருவருக்கே இந்த நிலைமையா என்று அதிமுக கட்சி தொண்டர்கள் ஆதங்கப்பட்டனர்.

ஓபிஎஸ்சை அசிங்கப்படுத்தினர்
பொதுக்குழு கூட்டம் தொடங்கியதும், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பெஞ்சமின் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ரோஜாப்பூ மாலை அணியித்து, பூங்கொடுத்து கொடுக்க வரவேற்றார். ஆனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்துக்கு எந்த மரியாதையும் அளிக்கப்படவில்லை. மேடையில் பேசிய வளர்மதி கூட ஓபிஎஸ் பெயரை சொல்லவில்லை. கே.பி.முனுசாமி, செம்மலை, ஜெயக்குமார் உள்ளிட்டவர்களும் ஓபிஎஸ் பெயரை கூட சொல்லாமல் புறக்கணித்தனர். இதில் கே.பி.முனுசாமி, செம்மலை, வளர்மதி உள்ளிட்டவர்கள் ஓபிஎஸ்சுடன் ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்த தலைவர்கள். ஆனால் நேற்று அதிமுக பொதுக்குழுவில், கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஓபிஎஸ்சை அசிங்கப்படுத்தி, அவருக்கு எதிராக கோஷம் எழுப்பி வெளியேற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

50 ஆண்டு வரலாற்றில் அதிமுகவில் உச்சக்கட்ட குழப்பம்
அதிமுகவை 1972ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி எம்ஜிஆர் தொடங்கினார். கட்சி தொடங்கி வருகிற அக்டோபர் மாதத்துடன் 50 ஆண்டு நிறைவடைந்து, பொன்விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த 50 ஆண்டில் எம்ஜிஆர், ஜெயலலிதா தலைமையில் எத்தனையோ பொதுக்குழு கூட்டம் நடைபெற்று இருக்கிறது. அப்போதெல்லாம் அதிமுக கட்சி நிர்வாகிகளிடம் ஒரு கட்டுப்பாடு இருந்தது. ஆனால், நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு போன்று எந்த ஆண்டும் நடைபெறவில்லை. இபிஎஸ் - ஓபிஎஸ் ஆகியோர் பிரச்னையை நேரில் பேசி தீர்த்து இருக்கலாம். இன்று தமிழக மக்களே அதிமுகவை நிராகரிக்கும் அளவுக்கு அதிமுக கட்சியில் உள்ள சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், வளர்மதி உள்ளிட்டவர்கள் நடவடிக்கை அமைந்துவிட்டதாக வருத்தத்துடன் அதிமுக தொண்டர்கள் கருத்து தெரிவித்தனர்.

30 நிமிடத்தில் முடிந்த பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு நேற்று காலை 10 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. எடப்பாடி வீட்டில் இருந்து பொதுக்குழுவுக்கு வரும் வழியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதால் 3.30 மணி நேரமாக பயணம் செய்து பொதுக்குழு கூட்டம் நடைபெறும் அரங்கத்துக்கு 11.30 மணிக்கு வந்தார். இதனால் தாமதமாக, காலை 11.35 மணிக்குதான் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. ஆனாலும், ஓபிஎஸ்சுக்கு எதிரான முழக்கம், 23 தீர்மானங்கள் நிராகரிப்பு காரணமாக 30 நிமிடங்களில் அதாவது நேற்று மதியம் 12.05 மணியுடன் பொதுக்குழு கூட்டம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

போலி அடையாள பாஸ் உடன் பலர் வருகை?
ஓபிஎஸ்-எடப்பாடிக்கு இடையிலான ஒற்றைத்தலைமை பிரச்னையால் அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு கட்சியின் சார்பில் அடையாள அட்டை விநியோகம் செய்யப்பட்டது. அழைப்பிதழ் மற்றும் அடையாள அட்டையுடன் வந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஆனால், பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தில் ஏராளமானோர் போலி அடையாள அட்டையுடன் சென்றதாக தகவல் பரவியது. சுமார் 500க்கும் மேற்பட்ட நபர்கள் போலி அடையாள அட்டையுடன் உள்ளே வந்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, போலி அடையாள அட்டையை பயன்படுத்தி உள்ளே சென்றவர்கள் யார் என்றும் விசாரணை நடைபெற்றது.

தன்னிலை மறந்த மாஜி அமைச்சர்
அதிமுக மேடையில் ஒருங்கிணைப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் இருந்தனர். அதில் மாநில பொறுப்பு வகிக்காத முன்னாள் அமைச்சர் ஒருவர் திடீரென மைக்கில் பேசினார். அவர் சாதாரணமாக பேசாமல், கூச்சல் போட்டு பேசினார். அவர் தன் நிலை மறந்து இருப்பதால்தான், முன்னாள் அமைச்சர் என்ற மதிப்பையும், பொறுப்பையும் உணராமல், மதுபானக்கடையில் பேசுவதுபோல கூச்சல் போட்டு பேசியதாக பொதுக்குழுவுக்கு வந்த அதிமுகவினர் அதிர்ச்சியுடன் பேசிக் கொண்டனர்.



Tags : OPS , Bottled water on OPS: Stir in public
× RELATED பா.ஜ.க. கூட்டணியில் எத்தனை தொகுதிகளை ஏற்பது?-ஓ.பி.எஸ்.ஸுக்கு அதிகாரம்