×

என்.எஸ்.சி போஸ் சாலை நடைபாதையில் ஆக்கிரமிப்புகள் மீண்டும் வராமலிருக்க சோதனை: மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பிராட்வே பகுதி நடைபாதைகளிலிருந்து அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைக்காதவாறு அதிரடி சோதனை நடத்தி, சிசிடிவி கேமரா பதிவுகளுடன் மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பிராட்வே என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள நடைபாதையை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதால் நெரிசல் ஏற்படுவதாக கூறி மறைந்த டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை மாநகராட்சி சரிவர அமல்படுத்தவில்லை. இதையடுத்து, மாநகராட்சி மீது 2016ம் ஆண்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்றிடம் வழங்க அவகாசம் வழங்கியிருந்தது.

 இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் என்.மாலா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது வரை நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றபடவில்லை என கூறி அதற்கான புகைப்படங்களை தாக்கல் செய்தார். சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆக்கிரமிப்புகள் அகற்றபட்டு வருவதாக தெரிவித்தார்.இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் வரும் திங்கட்கிழமை முதல் அடுத்த ஞாயிற்றுகிழமை வரை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி எந்த ஆக்கிரமிப்புகளும் இல்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும். சோதனை நடத்தப்படும் 7 நாட்களுக்கான சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய வேண்டும். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : NSC Bose Road pavement ,ICC , On the NSC Bose Road sidewalk Check to prevent recurrence of occupations: ICC order to the corporation
× RELATED உலக கோப்பைக்கு தயாராவதில் தடுமாறும்...