×

அதிமுக ஆட்சியில் 700 கோடி நில மோசடி வழக்கில் அதிகாரிகளை இதுவரை கைது செய்யாதது ஏன்?: விளக்கமளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: அதிமுக ஆட்சியில் ரூ.700 கோடி நிலமோசடி வழக்கில் தொடர்புடைய அதிகாரிகளை இன்னும் கைது செய்யாதது ஏன் என்பது குறித்து விளக்கமளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா வடவீரநாயக்கன்பட்டி, தாமரைகுளம், கெங்குவார்பட்டி ஆகிய கிராமங்களில் கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.700 கோடி மதிப்புள்ள 182 ஏக்கர் அரசு நிலம் அதிகாரிகள் துணையோடு, அதிமுக ஒன்றிய முன்னாள் செயலாளரும், ஓபிஎஸ்சிற்கு மிக நெருக்கமானவருமான அன்னப்பிரகாஷ் உள்ளிட்ட பலருக்கு முறைகேடாக பட்டா மாறுதல் செய்யப்பட்டது. பெரியகுளம் கோட்டாட்சியர்களாக இருந்த ஆனந்தி, ஜெயப்பிரதா, தாசில்தார்கள் கிருஷ்ணகுமார், ரத்னமாலா, துணைத்தாசில்தார்கள் மோகன்ராம், சஞ்சீவ்காந்தி, சர்வேயர்கள் பிச்சைமணி, சக்திவேல், விஏஓ சுரேஷ்குமார், அதிமுக ஒன்றியச் செயலாளராக இருந்த அன்னப்பிரகாஷ், அதிமுக பிரமுகரின் உறவினர் முத்துவேல்பாண்டியன், அழகர், ரமேஷ்கண்ணன் உள்ளிட்டோர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.

தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.  இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள துணை தாசில்தார் மோகன்ராமின் ஜாமீன் மனு ஏற்கனவே தள்ளுபடியான நிலையில், தனக்கு ஜாமீன் கோரி மீண்டும் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், ‘‘இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சில அதிகாரிகளின் முன்ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடியாகியுள்ளது. அவர்களை ஏன் இதுவரை கைது செய்யவில்லை. அரசு அதிகாரிகள் எப்படி தலைமறைவாக முடியும்?’’ என கேள்வி எழுப்பினார். பின்னர், அரசுத் தரப்பில் உரிய விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தார்.


Tags : AIADMK government ,Icord , 700 crore land scam case under AIADMK regime The authorities so far Why not arrest ?: Icord branch order to explain
× RELATED நாங்கள் கூட்டணி வைக்கலனா அதிமுக ஆட்சி...