சுவர்களுக்கு இடையே சிக்கிய புள்ளிமான் உயிருடன் மீட்பு: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

மாமல்லபுரம்: திருப்போரூர் வனத்துறையினரின் அலட்சியத்தால் தண்ணீர் தேடி வந்து மாமல்லபுரம்  அருகே 2 சுவர்களுக்கு இடையே சிக்கி கொண்ட புள்ளி மான் பல மணி நேர  போராட்டத்துக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டது. செங்கல்பட்டு மற்றும் திருப்போரூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஒரகடம், சிறுதாவூர், இள்ளளூர், மானாம்பதி, எச்சூர், கடம்பாடி, காட்டுப் பகுதிகளில் அரியவகை மான்கள், மயில்கள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அதில், அரியவகை புள்ளிமானும் ஒன்று. காட்டில், வாழும் மான், மயில் உள்பட விலங்குகள் உணவு, தண்ணீருக்காகவும் சாலையில் சுற்றி திரிகிறது.

மேலும், காட்டில் அமர்ந்து மது குடிக்க வரும் குடிமகன்கள் பாட்டில், கற்களை கொண்டு அடித்து விரட்டுவதாலும், காட்டில் தண்ணீர் தொட்டி இல்லாததாலும் அடிக்கடி சாலைக்கு வருகின்றன. அவ்வாறு, வரும் விலங்குகள் சாலையை கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு இறந்து விடுகின்றன. இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 4 வயது உள்ள ஒரு புள்ளிமான் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள ஒரு மாந்தோப்புக்கு தண்ணீர் தேடி வந்து, அங்குள்ள 2 சுவர்களுக்கு இடையே சிக்கி கொண்டது.

பின்னர், புள்ளி மான் வெளியே வர முடியாமல் கத்தியது. இதையடுத்து, அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து மானை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை. இது குறித்து தகவலறிந்த மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இரண்டு சுவர்களையும் சுத்தி மற்றும் உளியால் உடைத்து பல மணி நேர போராட்டத்துக்கு பின் லேசான காயத்துடன் புள்ளி மானை மீட்டனர். பின்னர், திருப்போரூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்து, வனத்துறையினரிடம் மானை ஒப்படைத்தனர். புள்ளிமானுக்கு மருத்துவர்கள் மூலம் உரிய சிகிச்சை அளித்து காட்டில் விடப்படும் என வனத்துறையினர் கூறினர்.

Related Stories: