×

யோகா தின கொண்டாட்டம்

காஞ்சிபுரம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 8வது சர்வதேச யோகா தின விழா பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளாசியுடன் துவங்கி, சிறப்பாக நடைபெற்றது, இவ்விழாவில் ஆயுர்வேத துறையை சார்ந்த மருத்துவர் பிந்து வரவேற்புரையாற்றினார். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் பேராசிரியர் எஸ்.வி.ராகவன் இவ்விழாவிற்கு தலைமை தாங்கி அவர்தம் உரையில் உடல்நலம் பேணுதலின் அவசியம் குறித்தும், அதில் யோகாவின் பங்கு குறித்தும் விளக்கி கூறினார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சர்வதேச செஸ் கிராண்ட் மாஸ்டர் செல்வன் ஆர் பிரக்ஞானந்தா மற்றும் அவருடைய பயிற்சியாளர் கிராண்ட் மாஸ்டர் ஆர் பி ரமேஷ் அவர்களும் கலந்து கொண்டனர். செல்வன் பிரக்ஞானந்தா அவர்களுக்கு இளம் சாதனையாளர் விருதினையும் அவருடைய பயிற்சியாளர் ஆர். பி. ரமேஷ் அவர்களுக்கு சிறந்த பயிற்சியாளர் விருதினையும் பல்கலைக் கழகத்தின் சார்பாக துணை வேந்தர் வழங்கினார். பல்கலைக்கழக ஆயுர்வேத துறையை சார்ந்த மருத்துவர் குருபிரசாத் தலைமையில் 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் யோகாசனங்களை செய்தனர். தொடர்ந்து இளங்கலை ஆயுர்வேத மாணவர் பார்கவ் ஆச்சார் யோகாசனங்களை அதன் சிகிச்சைப் பயன்பாடுகளுடன் செய்து காண்பித்தார்.

20க்கும் குறைந்த வயதினருக்கான கேடட் மற்றும் ஜூனியர் ஸ்டேட் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான முதல் பரிசினை வென்ற பல்கலைக்கழக பி.காம். முதலாமாண்டு மாணவர் கே.வி.பாரதிராஜாவும் கௌரவிக்கப்பட்டார். இன்றைய வாழ்வில் யோகாவின் முக்கியத்துவத்தை மாணவ சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்லும் விதமாக பல்கலைக் கழகத்தின் நாட்டு நலப் பணி திட்டத்தினர் பல்வேறு போட்டிகளை நடத்தியிருந்தனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு துணைவேந்தர் பரிசுகளை வழங்கினார். மின்னணுவியல் துறை துணை பேராசிரியர் உமா அவர்களின் நன்றியுரையுடன் விழா நிறைவடைந்தது.

Tags : Yoga Day , Yoga Day Celebration
× RELATED சுதர்சன் பொறியியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்