×

மகனின் முகவரி தெரியாததால் பெங்களூரில் 11 மணி நேரம் தவித்த தமிழக மூதாட்டி

பெங்களூரு: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் வசந்தி (60). இவரது மகன் ராஜேஷ், தனது மனைவி கவுதமியுடன் பெங்களூரு புலிகேசிநகர் அருகே கஸ்தூரிநகர் வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மகன், மருமகளை பார்ப்பதற்காக பெங்களூருவுக்கு வந்தார் வசந்தி. இந்நிலையில் காய்கறி வாங்குவதற்காக வசந்தி கடைக்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு செல்ல வழி தெரியவில்லை. செல்போனையும் வீட்டில் வைத்து சென்றதால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் ஒரு பள்ளியின் முன்பு நீண்ட நேரமாக அமர்ந்திருந்தார்.

இதை பார்த்த அப்பகுதி மக்கள், ஒய்சாலா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து வசந்தியிடம் விசாரித்தனர். அவருக்கு தமிழ் மட்டுமே தெரியும் என்பதால், போலீசாரால் அவரை பற்றிய விவரத்தை பெற முடியவில்லை. பின்னர் புலிகேசிநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு தமிழ் தெரிந்த ஒருவர் உதவியுடன் வசந்தியிடம் போலீசார் விசாரித்தனர். ஆனால் அவருக்கு மகனின் விலாசத்தை சொல்ல தெரியவில்லை. ஆனால் ஆரணியில் உள்ள தனது வீட்டின் முகவரியை கூறி இருந்தார். இதையடுத்து ஆரணி போலீஸ் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு புலிகேசிநகர் போலீசார் பேசினர். இதையடுத்து வசந்தியின் வீட்டிற்கு சென்ற ஆரணி போலீசார், அவரது கணவர் ராஜேந்திரனிடம் இருந்து ராஜேசின் செல்போன் நம்பரை வாங்கி கொடுத்தனர்.

இதன்பின்னர் புலிகேசிநகர் போலீசார், ராஜேசை தொடர்பு கொண்டு வசந்தி போலீஸ் நிலையத்தில் இருப்பது பற்றி தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் நிலையத்திற்கு ராஜேசும், கவுதமியும் சென்றனர். தனது மகன், மருமகளை பார்த்ததும் வசந்தி ஆனந்த கண்ணீர் விட்டார். வசந்தியை அவரது மருமகள் கவுதமி கட்டி தழுவி ஆசுவாசப்படுத்தினார். பின்னர் வசந்தியை வீட்டிற்கு அழைத்து சென்றனர். மேலும் போலீசாருக்கும் நன்றி கூறினர். காலை 7 மணிக்கு சென்று வழிமாறிய வசந்தியை மாலை 6 மணிக்கு தான் அவரது மகன், மருமகள் பார்த்தனர். வசந்தி 11 மணி நேரம் பரிதவிப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu ,Bangalore , Tamil Nadu grandmother who stayed in Bangalore for 11 hours due to not knowing her son's address
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை