மாமல்லபுரம் அருகே சுவர்களுக்கு இடையே சிக்கிய புள்ளிமான் பத்திரமாக மீட்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே சுவர்கள் நடுவே சிக்கிய புள்ளிமானை பத்திரமாக மீட்டனர். மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி பகுதியில் உள்ள ஒரு மாந்தோப்பில் இருந்து மான் சத்தம் கேட்டது. இதனால் அந்த பகுதியை இளைஞர்கள் சென்று பார்த்தபோது 2 சுவர்களுக்கு இடையே சிக்கிய புள்ளிமான் வெளியே வர முடியாமல் சிக்கித் திணறியது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மாமல்லபுரம் தீயணைப்பு படையினர் விரைந்துவந்து இளைஞர்கள் துணையுடன் 2 பக்க சுவர்களின் அடிப்பகுதியில் துளையிட்டு, பல மணி நேர போராட்டத்துக்கு பின் புள்ளிமானை உயிருடன் மீட்டனர். இதன்பின்னர் புள்ளிமானை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். லேசான காயம் அடைந்த மானுக்கு சிகிச்சை அளித்து மீண்டும் காட்டில் விடப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

‘’செங்கல்பட்டு, திருப்போரூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப் பகுதிகளில் இருந்து தண்ணீர், உணவு தேடி புள்ளிமான்கள், மயில்கள் ஆகியவை அடிக்கடி ஊருக்குள் வருகின்றன. இவ்வாறு வரும்போது மின்வேலி, மதில் சுவர்களில் சிக்கிக் கொள்கிறது. சிலநேரம் வாகனங்களில் அடிபட்டு இறந்துவிடுகிறது. எனவே, வனத்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தவேண்டும்’ என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

Related Stories: