பஞ்சாபில் பன்றி காய்ச்சலுக்கு பாஜ நிர்வாகி பலி; சிகிச்சையில் மேலும் 2 பேர்

லூதியானா: லூதியானாவில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாஜ நிர்வாகி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பன்றி காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் சிகிச்சையில் உள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் ஸ்வைன் ஃப்ளூ எனப்படும் பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. எச்1 என்1 வைரஸ் மூலம் பரவும் இந்த காய்ச்சல் ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த ஏப்ரலில் தீவிரமாக பரவியது. தொடர்ந்து அங்கிருந்து, மற்ற நாடுகளுக்கு பரவி வருகிறது. இந்தியாவில் மிசோரம் மாநிலத்தில் பன்றிகள் மூலம் இந்த காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் கிச்சலி நகரை சேர்ந்த பாஜ நிர்வாகி சந்தீப் கபூர், பன்றி காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார்.

கடந்த ஒரு வாரமாக காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை எடுத்தும் காய்ச்சல் குறையவில்லை. இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்னர்  அவருக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து லூதியானாவில் உள்ள தயானந்த் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு பன்றி காய்ச்சல் வைரசான எச்1 என்1 தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் உயிரிழந்தார். 46 வயதேயான அவர் பிஎல் பட்டதாரி. பாஜகவில் மாநில அளவில் சட்ட ஆலோசனைக்குழு  நிர்வாகியாக இருந்தார். நாட்டில் இந்த ஆண்டு பன்றி காய்ச்சல் நோய்க்கு பலியான முதல் நபர் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் பன்றி காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு 52 மற்றும் 56 வயதுடைய 2 பேர் தயானந்த் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது சிகிச்சையில் உள்ளனர் என்றும், கடும் மூச்சுத்திணறால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களது உடல் நிலை தற்போது சீராக உள்ளது என்றும்  மருத்துவமனை தெரிவித்துள்ளது. சந்தீப் கபூரின் மரணத்தையடுத்து, மாநிலத்தில் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு, குணமடையாமல் உள்ளவர்களின் ரத்த மாதிரிகள் அனைத்தும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் சந்தீப் கபூருடன் தொடர்பில் இருந்தவர்கள், தற்போது சிகிச்சையில் உள்ள 2 நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் என மொத்தம் 200க்கும் மேற்பட்டோரின் ரத்த மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இன்று மாலைக்குள் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் என்றும், அதன் பின்னரே பன்றி காய்ச்சல் பரவுவதை உறுதி செய்ய முடியும் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: