×

நின்னக்கரை பூங்காவை பராமரிக்க வலியுறுத்தல்

செங்கல்பட்டு: பராமரிப்பின்றி கிடக்கும் மறைமலைநகர் நின்னக்கரை பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நின்னக்கரை ஏரி உள்ளது. இந்த ஏரியை சுற்றிலும் 3 கிமீ தூரத்துக்கு மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளது. குழந்தைகள் விளையாடுவதற்கு வசதியாக ஊஞ்சல், சறுக்கி விளையாடக்கூடிய சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கும், இளைப்பாறுவதற்கும் கடப்பா கல்லிலால் ஆன 20க்கும் மேற்பட்ட தின்னைகள், சாலைகள் கடந்த 10 ஆண்டுக்கு முன் பூங்கா அமைக்கப்பட்டது.

மறைமலைஅடிகள் சாலையில் துவங்கி மறைமலைநகர் பேருந்து நிலையம் வரை 3 கிமீ தூரம் கொண்ட பூங்கா நின்னக்கரை ஏரியை சுற்றிலும் அமைந்துள்ளதால் கோடைகாலங்களில் இயற்கை சூழலுடன் மிகவும் ரம்மியமாக காட்சியளித்தது. குழந்தைகளோடு பொழுது போக்குவதற்கு சிறந்த இடமாக விளங்குகிறது.

இந்நிலையில் பூங்காவை சுற்றிலும் முட்புதர் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் சமூகவிரோதிகள் கஞ்சா அடிப்பதற்கும், மதுஅருந்துவதற்கும் பூங்காவை பயன்படுத்தி வருகின்றனர். மதுபோதையில் அங்கேயே தூங்குவது, காலி பாட்டில்களை வீசிவிட்டு செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். கள்ளக்காதலர்கள் உல்லாசமாக இருப்பதற்கும் பூங்கா பயன்படுத்தப்படுகிறது. இதை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர்.

இங்குள்ள கழிவறைகள் தண்ணீர் வசதியின்றி துர்நாற்றம் வீசுகிறது. பூங்கா நடைபயிற்சி அருகே அரசு பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் பூங்கா நடைபாதை பயன்படுத்தி வருகின்றனர். எனவே, பராமரிப்பின்றி கிடக்கும் பூங்கா சீரமைத்து, மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.



Tags : Ninnakkarai Park , Insistence on maintenance of Ninnakkarai Park
× RELATED ரேஷன் பொருள் கடத்தல் வழக்கில்...