மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் இன்று காலை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஒருங்கிணைப்பு அலுவலர் சங்கர் ஐஏஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் ராகுல்நாத் உள்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.  

மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ரிசார்ட்டில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 27ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 10ம் தேதிவரை நடைபெறுகிறது. இதில் 187 நாடுகளை சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். முன்னதாக, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பல்வேறு துறைகள் சார்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள், செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் இடத்தின் அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர்.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி ஒருங்கிணைப்பு சிறப்பு அலுவலர் சங்கர் ஐஏஎஸ் தலைமையில், இன்று காலை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் இடத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு துறைகளின் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் போட்டி நடைபெறும் இடம், வீரர்கள் தங்கும் விடுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் விளக்கி கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், மாவட்ட எஸ்பி சுகுணா சிங், முதன்மை அலுவலர் மற்றும் ஒலிம்பியாட் கமிட்டி செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், போட்டி அரங்க பொறுப்பாளர் அனந்தராம், மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன், திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரன், காஞ்சிபுரம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், வருவாய் ஆய்வாளர் ரகு உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Stories: