வீட்டில் பதுக்கிய 12 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

வீதிருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள செம்பட்டையன்கால் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(23). இவரது வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் வேட்டையாடப்பட்ட பன்றி இறைச்சி இருப்பதாக வனத்துறையினருக்கு நேற்றிரவு தகவல் கிடைத்தது. இது குறித்து கிருஷ்ணன்கோவில் போலீசாருக்கு, வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

பின்னர் போலீசாரும், வனத்துறையினரும் இணைந்து கார்த்திக்கின் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். இதில் வீட்டின் மறைவில் பதுக்கி வைத்திருந்த 12 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் வேட்டையாடப்பட்ட பன்றி இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் வெடிகுண்டு தடுப்பு போலீசார் வரவழைக்கப்பட்டு, அங்கிருந்து 12 நாட்டு வெடிகுண்டுகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டன. இதனையடுத்து திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்திற்கு கார்த்திக்கை அழைத்து வந்து போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வனவிலங்குகளை வேட்டையாடிதாக கார்த்திக் மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. வீட்டில் 12 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதிமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: