சிவகாசி பகுதியில் கலப்பட இட்லிமாவு உஷாருங்க... சாப்பிட்டா ஆயிடும் பேஜாருங்க...உணவுத்துறை அதிகாரிகள் கவனிப்பார்களா?

சிவகாசி : சிவகாசி பகுதியில் கலப்பட இட்லிமாவு விற்பனை அதிகரித்து வருவதால் உணவுத்துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் உள்ள சின்ன சின்ன வீதிகளுக்குள் சென்றாலும், ரெடிமேட் இட்லி, தோசை மாவு விற்பதை காணலாம். சமீபகாலமாக பெட்டிக்கடை, தள்ளுவண்டி மூலமாகவும் விற்கப்படுகின்றன.

இன்றைய அவசர உலகில், வீடுகளில் மாவரைத்து பயன்படுத்த சோம்பல்படும் பலரும், இவற்றை வாங்கி பயன்படுத்துகின்றனர். வீடுகளில் மாவு தயாரித்து விற்பவர்களில் எத்தனை பேர், சுகாதார வழிமுறையை பயன்படுத்துகின்றனர் என்பது கேள்விக்குறி. பெரும்பாலானவர்கள் சுகாதாரமற்ற இடங்களிலும், சுகாதாரமற்ற தண்ணீர், மலிவான அரிசி மற்றும் உளுந்துகளை பயன்படுத்தி, மாவு தயாரிக்கின்றனர் என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.

ரூ.20 முதல் ரூ26 வரை ஒவ்வொரு கடையில் சிறு வித்தியாசத்துடன் மாவு விற்பனை செய்யப்படுகின்றது. மாவு வகைகள் அனைத்தும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட வேண்டும் என நிபந்தனை. ஆனால், இந்த நிபந்தனைகளை பின்பற்றுகிறார்களா என்பது கேள்விக்குறியே. இம்மாவில் ஆமணக்கு விதை, ஆப்ப சோடா, ஈஸ்ட், படிகாரம், பிளீச்சிங் பவுடர், ஒயிட் கெமிக்கல்ஸ் போன்றவை கலப்படம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

இவ்வாறு கலப்படம் மற்றும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொள்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு தண்ணீரால் பரவும் நோய்கள், வயிற்று வலி உட்பட பல்வேறு பாதிப்புகள் வருகின்றன என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். குடிசை தொழில் போல் பெருகி வரும் மாவு விற்பனை தொழிலை முறைப்படுத்தி ஆய்வுக்கு உட்படுத்தி சுகாதாரமான முறையில் தரமான மாவு பொது மக்களுக்கு கிடைக்க அதிகாரிகள் முயற்சிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Related Stories: