×

மலைப்பாதையில் நள்ளிரவு விபத்து அரிசி ஏற்றிச்சென்ற லாரி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து டிரைவர் பலி-பேரணாம்பட்டு அருகே பயங்கரம்

பேரணாம்பட்டு : பேரணாம்பட்டு அருகே மலைப்பாதையில் நள்ளிரவு சுமார் 100 அடி பள்ளத்தில் அரிசி ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில் டிரைவர் பலியானார். தஞ்சாவூர் மாவட்டம் பாபனாசம் பகுதியை ேசர்ந்தவர் வேல்முருகன்(38), லாரி டிரைவர். இவர் கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் இருந்து சென்னைக்கு 35 டன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு லாரியில் சென்றுகொண்டிருந்தார். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பத்திரப்பல்லி மலைப்பாதை வழியாக வந்தபோது அங்குள்ள 4வது வளைவு பகுதி அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பலமுறை பல்டி அடித்து சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அப்போது அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். போதிய வெளிச்சம் இல்லாததால் டிரைவரை மீட்க முடியாமல் திணறினர். இதையடுத்து மலையடிவாரத்திற்கு சென்று வனத்துறை அலுவலகத்திற்கு தெரிவித்தனர். அதன்பேரில் தகவலறிந்த பேரணாம்பட்டு காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்தனர். மீட்பு பணிகளுக்கென ராட்சத மின்விளக்குகள் கொண்டுவரப்பட்டது.

சுமார் 2 மணி நேரம் போராடி பள்ளத்தில் இறங்கி மீட்பு பணிகளை மேற்கொண்டனர். ஆனால் அதற்குள் லாரி டிரைவர் உடல் நசுங்கி இறந்தது தெரியவந்தது. விபத்து நடந்த பகுதி முழுவதும் அரிசி மூட்டைகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தது. இதையடுத்து சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு, எஸ்ஐ தேவபிரசாத் ஆகியோர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் விடியவிடிய பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Peranampattu , Peranampattu: The driver of a lorry carrying rice overturned in a ditch about 100 feet at midnight on a hill near Peranampattu.
× RELATED மைசூரில் திருடப்பட்ட 7 லேப்டாப், 2...