ஜெகன் அண்ணா வீட்டுமனை திட்டத்தில் வீடு கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்-மாநகராட்சி ஆணையாளர் அனுபமா அஞ்சலி உத்தரவு

திருப்பதி :  ‘ஜெகன் அண்ணா வீட்டு மனை திட்டத்தில், இன்ஜினியரிங் மற்றும் வீட்டு வசதி அதிகாரிகளை ஒருங்கிணைத்து, வீடு கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்’ என்று மாநகராட்சி ஆணையாளர் அனுபமா அஞ்சலி உத்தரவிட்டார். ஆந்திர மாநில அரசு வீடற்ற ஏழை மக்களுக்கு ஜெகன் அண்ணா வீட்டுமனை திட்டத்தின் மூலம் வீடுகட்டி அளிக்கும் பணிகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. திருப்பதி அடுத்த கொங்கரவாரிப்பள்ளி அருகே எம்.கோட்டப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் ஜெகன் அண்ணா காலனியில் நேற்று மாநகராட்சி பொறியியல் மற்றும் வீட்டு வசதித்துறை அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையாளர் அனுபமா அஞ்சலி ஆய்வு மேற்கொண்டார்.

 அப்போது அவர் கூறியதாவது: ஜெகன் அண்ணா வீட்டுமனை பணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும். வீடற்ற ஏழை பயனாளிகளுக்கு மாநில அரசால் கட்டித்தரப்படும். வீடுகளுக்கு ‘ஜியோ டேக்கிங்’ பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது. வீடுகள் கட்டும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். மக்கள், வாகனங்கள் வந்து செல்லும் வகையில், இணைப்பு சாலைகள் விரைந்து அமைக்க வேண்டும்.

கட்டுமானத்துக்குத் தேவையான சிமென்ட், மணல், செங்கல், ஓடுகளும் கிடைக்கச் செய்ய வேண்டும். ஒவ்வொரு வீடு கட்டும்போதும் ஆழ்துளைகள் அமைத்து தேவையான தண்ணீர் அதிகமாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். வீடு கட்டும்போது பயனாளிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், அதனால் அவர்கள் வந்து கட்டமைப்புகளை ஆய்வு செய்யலாம். இன்ஜினியரிங் மற்றும் வீட்டு வசதி அதிகாரிகளை ஒருங்கிணைத்து, வீடு கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.கமிஷனருடன் துணை கமிஷனர் சந்திரமவுலீஸ்வர் ரெட்டி, டி.இ. சஞ்சய்குமார், வீட்டு வசதி வாரிய செயலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: