திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சொந்த கட்டிடம் கட்ட வேண்டும்-பெற்றோர்கள் எதிர்பார்ப்பு

திருத்துறைப்பூண்டி : திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் தற்காலிகமாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்று இடத்தில் சொந்த கட்டிடம்ம் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தற்போது, பட்டுக்கோட்டை சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் இடநெருக்கடியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வந்ததையறிந்த அப்போதைய மாவட்ட ஆட்சியர் சந்திரசேகரன், பட்டுக்கோட்டை சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு ஆண்கள் பள்ளிக்காக நபார்டு திட்டத்தின்கீழ் கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்படாமல் இருந்த 17 வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்துக்கு பெண்கள் பள்ளியை மாற்றி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, அந்த கட்டிடத்தில் 2010 ஆண்டு முதல் பெண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளிக்கு புதிய பேருந்துநிலையம், பழைய பேருந்து நிலையம், அண்ணா சாலை பகுதியில் பேருந்துகளிலிருந்து இறங்கி முள்ளி ஆற்றங்கரை வழியாக பள்ளிக்கு மாணவிகள் நடந்து வரவேண்டியுள்ளது. இந்நிலையில் காலை, மாலை நேரங்களில் மேட்டுத் தெருமுள்ளியாற்று பாலத்தில் சிலர் அமர்ந்து கொண்டு மாணவிகளை கிண்டல் செய்வது தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும், ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தடுப்புச் சுவர் அமைக்கப்படாத நிலையில் போதிய பாதுகாப்பற்ற சூழலில் பெண்கள் பள்ளி இயங்கி வருகிறது.

ஆரம்ப காலகட்டங்களில் 900 மாணவிகள் படித்து வந்த நிலையில் படிப்படியாக மாணவிகளின் எண்ணிக்கை குறைந்து தற்போது சுமார் 216 மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும்

திருத்துறைப்பூண்டி திருக்குளத்தின் மேல்கரையில் முன்பு செயல்பட்டு வந்த அரசு பெண்கள் மருத்துவமனை வேதாரண்யம் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த மருத்துவமனை வளாகத்துக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, அந்த இடத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி தற்காலிகமாக செயல்பட்டு அதுவும் தற்போது திருவாரூர் சாலையில் உள்ள தண்டலைச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு விட்டது.

தற்போது, அரசு பெண்கள் மருத்துவமனை இருந்த இடம் பயன்பாடின்றி உள்ளதால், அங்கு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டி, அங்கு நிரந்தரமாக செயல்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: