×

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் நடுரோட்டில் காய்கறி கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

வேலூர் : வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் காய்கறி கழிவுகள் நடுரோட்டில் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடக மாநிலம் மற்றும் ஓசூர், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் காய்கறிகள், பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அதேபோல் வேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் காய்கறிகள் மொத்தம், சில்லறை விலையில் நேதாஜி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. வணிக வளாகங்கள், மளிகை கடைகளை விட காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படுவதால் நேதாஜி மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் எந்த நேரமும் அதிகமாக காணப்படும். பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள், வணிகர்கள் இங்கு வந்து காய்கறிகளை மொத்தமாக வாங்கி சென்று விற்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால் நேற்று மார்க்கெட் பகுதியில் பல இடங்களில் காய்கறி கழிவுகள் பொதுமக்கள் நடந்து செல்லும் வழியில் குவியல் குவியலாக குவிந்துள்ளது. மாடுகளும் மார்க்கெட் பகுதியில் சுதந்திரமாக சுற்றி திரிந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:நேதாஜி மார்க்கெட்டுக்கு வரும் மக்கள் மட்டுமின்றி, சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்களும் கடும் நெரிசலுடன், சேற்றிலும், சகதியிலுமே நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாடுகளும் சுற்றித்திரிவதால் காய்கறிகளை வாங்க வரும் பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர். மாநகராட்சி சார்பில் குப்பைகளை அள்ளி சென்றுவிடுகின்றனர்.

ஆனால் காலதாமதமாக செய்வதால் காலை நேரங்களில் மார்க்கெட்டிற்கு வரும் அனைவரும் அவதிப்படுகின்றனர். வாகனங்களும் வழியில் நிறுத்தி வைப்பதால் நடந்து கூட செல்ல முடியவில்லை. மேலும் வியாபாரிகளும் வீணான காய்கறிகளை ஓரமாக வைக்காமல் நடுரோட்டிலேயே கொட்டிவிடுகின்றனர். தற்போது மழை பெய்வதால் இவை அழுகி துர்நாற்றம் வீசுகிறது. இதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Netaji Market ,Vellore , Vellore: The public demand to stop the dumping of vegetable waste in the middle of the road at Netaji Market in Vellore
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...