×

கவியரசு கண்ணதாசனின் 96வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை.!

சென்னை: கவியரசு கண்ணதாசன் அவர்களின் 96ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 24.06.2022 அன்று காலை 9.00 மணியளவில் சென்னை, தியாகராயர் நகர், கோபதி நாராயணா சாலையில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள். கவியரசு கண்ணதாசன் அவர்கள் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள சிறுகூடல்பட்டியில் சாத்தப்பன்-விசாலாட்சி தம்பதியருக்கு 24.06.1927 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். இவரின் இயற்பெயர் முத்தையா. சிறுகூடல்பட்டி பள்ளியில் ஆரம்பக் கல்வியும், அமராவதிபுதூரில் பள்ளிப் படிப்பையும் பயின்றார்.

கவியரசு கண்ணதாசன் அவர்கள் தனது இளமைப் பருவத்தில் எழுத்தாற்றலில் மிகுந்த ஆர்வமும், புத்தகங்களை வாசிப்பதில் அதிக நாட்டமும் கொண்டிருந்தார். பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையிடம் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். கவியரசு கண்ணதாசன் அவர்கள் கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு, பெரும்புலவன் பாரதியாரை மானசீகக் குருவாக ஏற்றுக் கொண்டார். கவியரசு கண்ணதாசன் அவர்கள் கவிதைகள், இலக்கியம், சிறுகதைகள், நாடகங்கள் போன்றவற்றில் தனித்தன்மையோடு சிறந்து விளங்கினார்.

திருமகள், திரைஒலி, மேதாவி, சண்டமாருதம், தென்றல், கண்ணதாசன் மாத இதழ், கடிதம் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்துள்ளார். கவியரசு கண்ணதாசன் அவர்கள் படைத்த இலக்கியங்களில் மாங்கனி, ஆட்டனத்தி - ஆதிமந்தி, கவிதாஞ்சலி, தைப்பாவை, பாண்டிமாதேவி ஆகியவை மிகச் சிறந்து விளங்கிய காவியங்களாகும். மேலும் 20க்கும் மேற்பட்ட நவீனங்கள் மற்றும் கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார். கவியரசு கண்ணதாசன் அவர்களின் சிறப்பான கவிதைத் தொகுப்புகள் ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அவர் எழுதிய நாடகங்களில் அனார்கலி, சிவகங்கை சீமை, ராஜதண்டனை, அருணோதயம் ஆகியவை சிறந்த நாடகங்களாகத் திகழ்கின்றன. குறிப்பாக, அர்த்தமுள்ள இந்துமதம், இயேசு காவியம் ஆகியவை எண்ணற்ற வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது. இவரது “அழகி” என்னும் கவிதை ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

 மேலும், தமிழகத் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியராகவும், சிறந்த கவிஞராகவும் திகழ்ந்தார். திரைப்படத் துறையில் தனது முதற் பாடலை ‘கன்னியின் காதலி’ என்ற திரைப்படத்திற்கு எழுதினார். இதனைத் தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை வசனமும், ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும் எழுதியுள்ளார். 1970 ஆம் ஆண்டு மத்திய, மாநில அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது பெற்றார். 1978 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அரசவைக் கவிஞரானார்.  1979 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றார்.

உலகிலுள்ள தமிழர்களின் நெஞ்சமெல்லாம் தனது சிறப்பான பாடல்கள் மூலம் நிறைந்துள்ள கவிஞர் கண்ணதாசன் அவர்கள் மறைந்தும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 30.01.1990 அன்று கவியரசு கண்ணதாசன் மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டிப் பேசும்போது, ‘எனக்கும் கவிஞர் கண்ணதாசனுக்கும் 1947ஆம் ஆண்டு முதல் நட்பு ஏற்பட்டது. பொதுவாழ்வில் எங்கள் நட்பு ஒன்றோடு ஒன்று மோதியது உண்டு. ஆனாலும் இருவருடைய உள்ளமும் நட்பும் தொடர்ந்து தழைத்து வந்தது. 40 ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் நண்பர்களாக வாழ்ந்து வந்துள்ளோம். அரசியலுக்கு அப்பாற்பட்டு எங்கள் நட்பு சிறந்து விளங்கியது.

கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ‘நலிந்தோருக்காகவும், ஏழை ஏளியோர்க்காகவும் பாடியவர்; தந்தை பெரியாருக்கும் பேரறிஞர் அண்ணாவுக்கும் பாடியவர்’ என்று  முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெருமிதத்தோடு குறிப்பிட்டார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 24ஆம் நாள் அவருடைய பிறந்த நாளுக்குச் சிறப்புச் சேர்க்கின்ற வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் விழா சென்னையிலும், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள மணிமண்டபத்திலும் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

Tags : Government of Tamil Nadu ,Kaviyarasu Kannadasan , On behalf of the Government of Tamil Nadu, a tribute was paid to the statue of Kaviyarasu Kannadasan on the occasion of his 96th birthday.
× RELATED தமிழ்நாடு அரசின் 108 கட்டுப்பாட்டு...