லாக்கப்பில் வாலிபர் இறந்த வழக்கு கான்ஸ்டபிள் ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: போலீஸ் காவலில் விக்னேஷ் என்ற வாலிபர் மரணமடைந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிளின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் பகுதியில் பட்டாக்கத்தி மற்றும் கஞ்சா வைத்திருந்ததாக பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் தலைமை செயலக காலனி போலீசாரால்  கைது செய்யப்பட்டார். அன்று இரவே அவர் விசாரணையின்போது உயிரிழந்தார். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடர்ச்சியாக நடந்து வந்தது.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபை கூட்டத்தில் விக்னேஷ் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை தொடர்வதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் அந்த காவல் நிலையத்தில் இருந்த போலீசார் விக்னேஷை லத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, குற்றவாளியாக காவலர் பவுன்ராஜ், தலைமை காவலர் முனாப், சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், ஊர்க்காவல் படை வீரர் தீபக், ஆயுதப்படை காவலர்கள் ஜெகஜீவன், சந்திரகுமார் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் மீது கொலை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களில் காவலர் பவுன்ராஜ் தவிர மற்ற 5 பேரின் ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க கோரி பவுன்ராஜ் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு அரசு வழக்கறிஞர் எம்.சுதாகர் ஆஜராகி, இந்த வழக்கின் விசாரணை ஆரம்பகட்டத்தில் இருப்பதால் மனுதாரருக்கு ஜாமீன் வழங்க கூடாது. அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என்று வாதிட்டார். இதையடுத்து, பவுன்ராஜின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Stories: