×

சயனைடு வழக்கில் 7 ஆண்டாக தண்டனை குறைப்பு விடுதலைப்புலிகள் அமைப்பினர் 2 பேர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை:  சயனைடு வழக்கில் 7 ஆண்டாக தண்டனையை குறைத்த ஐகோர்ட் கிளை, விடுதலைப்புலிகள் அமைப்பினர் இருவரும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே 2015ல்  கியூ பிரிவு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த காரை சோதனையிட்டதில், இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த சுபாஷ்கரன், கிருஷ்ணகுமார் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து சயனைடு குப்பிகள், சேட்டிலைட் போன், சிம்கார்டுகள், இலங்கை பணம் மற்றும் அடையாள அட்டை உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் கடந்த 2018ல் இருவருக்கும் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை குறைத்து தங்களை விடுவிக்கக் கோரி, இருவரும் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி கே.முரளிசங்கர் விசாரித்தார். மனுதாரர் வக்கீல் திருமுருகன் ஆஜராகி, ‘‘கைது செய்யப்பட்டது முதல் 6 ஆண்டுகள் 10 மாதமாக தொடர்ந்து சிறையில் உள்ளனர். எனவே, இவர்களை விடுதலை ெசய்ய வேண்டும்’’ என வாதிட்டார்.

அரசு கூடுதல் வக்கீல் மீனாட்சிசுந்தரம் ஆஜராகி, ‘‘விடுதலை செய்தால், இலங்கைக்கு செல்வதற்கு முன் எந்தவித சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடக் கூடாது. வெளியேறும் வரை முகாமில் தங்கியிருக்க வேண்டும்’’ என வாதிட்டார். மனுதாரர்கள் தரப்பில், இந்தியாவை விட்டு வெளியெறும் வரை முகாமில் தங்கியிருப்பதாகவும், எந்தவித சட்டவிரோத செயலிலும் ஈடுபட மாட்டோம் என அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத்தண்டனை 7 ஆண்டாக குறைக்கப்படுகிறது. இருவரும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும். அதுவரை அகதிகள் முகாமில் தங்கியிருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.


Tags : cyanide ,LTTE ,ICC , 2 LTTE cadres sentenced to 7 years imprisonment in cyanide case: ICC branch
× RELATED விடுதலைப் புலிகள் நினைவுதினம்...