தொழிலதிபர்கள் மூலம் பாஜ ஊழல்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: தொழிலதிபர்களை வைத்து பாஜ ஆட்சியாளர்கள் ஊழலை செய்து கொண்டிருக்கிறார்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள மன்னார் பகுதியில் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை அதானி நிறுவனத்துக்கு வழங்குமாறு அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழுத்தம் கொடுத்ததாக இலங்கை மின்துறையின் தலைவராக இருந்த எம்.எம்.சீ.பெர்டினன்டோ வெளியிட்டுள்ள தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் கவுதம் அதானியின் தொழில்கள் பெரிய அளவில் வளர்ச்சியடைந்தன. தொலைதொடர்பு, வணிக வளாகங்கள், பெட்ரோலியம் என வணிகம் சார்ந்த களத்தில் ரிலையன்ஸ் பயணித்து லாபம் ஈட்டுகிறது. துறைமுகம், ரயில்வே துறை, விமான நிலையங்கள், எரிசக்தி என அடிப்படை சேவை சார்ந்த களத்தில் பயணித்து லாபம் ஈட்டுகிறது அதானி குழுமம். தொழிலதிபர்களை வைத்து பாஜ ஆட்சியாளர்கள் ஊழலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைதான் அதானியின் 8 ஆண்டுகால அசுர வளர்ச்சி காட்டுகிறது. அரசு இயந்திரங்கள் அனைத்தும் அதானியின் பின்னே நிற்கின்றன.

அமலாக்கத்துறை அதானியை அரவணைக்கிறது. அரசின் மற்ற உயர் அரசு நிறுவனங்களுக்கும் அதானி செல்லப்பிள்ளையாக மாறியிருக்கிறார். அதானி போன்றோரை வளர்த்துவிட்டு, பின்னர் அவர்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி என்ற பெயரில் பெரும் தொகையை பெறுகின்றனர். அதாவது ஊழலை பாஜ ஆட்சியாளர்கள் சட்டப்பூர்வமாக்கிவிட்டதையே இது காட்டுகிறது. இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, ஆஸ்திரேலியா என வெளிநாடுகளிலும் கவுதம் அதானி காலூன்ற உதவி செய்ததன் மூலம், ஊழலை கடல் கடந்தும் விரிபடுத்தியிருக்கிறது மோடி அரசு. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: