×

நடராஜர் கோயிலும் சிதம்பரம் ரகசியமும்... தீட்சிதர்களின் சர்ச்சைகளும், வழக்குகளும்...: வெளிவராத தகவல்கள் அம்பலம்

தில்லை மரங்கள் சூழ்ந்த அடர்ந்த காட்டில் இருந்த சிறிய கோயிலை பற்றி அறிந்து அங்கு வந்த பல்லவ மன்னன் சிம்மவர்மன் என்ற அரசன் சிவபெருமானை  வணங்கி சிவகங்கையில் நீராடியதால் அவனை வாட்டிய நோய் அகன்றது. அதன் பின்னர் அவன் தனது நாட்டுக்கு  சென்று முடிசூடிக் கொண்டு, மீண்டும் சிதம்பரத்துக்கு வந்து தனக்கு நோயை  தீர்த்த நடராஜருக்கு கோயிலை கட்டியதாக கூறுகிறது வரலாறு. கோயிலை  கட்டிய சிம்மவர்மன் திருவிழாக்கள் நடத்துவதற்கும், பூஜைகள் செய்வதற்கும் பெரும்  பொருளையும் கொடுத்துள்ளான். அவனுக்கு பின்னர் வந்த சோழ மன்னர்கள்  சிதம்பரம் கோயிலை பல நிலைகளில் மேம்படுத்தி, பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளை கோயிலில் செய்துள்ளனர். கோயிலின் பேரம்பலத்திற்கு  சோழன் மன்னர்கள் பொற்கூரை வேய்ந்தனர். தொடர்ந்து விக்கிரம சோழன்,  கோப்பெருஞ்சிங்கன், சடையவர்மன் சுந்தரபாண்டியன், ராஜராஜசோழன் என பல  மன்னர்களும் கோயிலுக்கு பல்வேறு திருப்பணிகளை செய்ததன் காரணமாகவே பிரமாண்டமாக நிமிர்ந்து நிற்கிறது, சிதம்பரம் நடராஜர் கோயில். இப்படியாக தமிழ் மன்னர்களின் கொடையளிப்பு, பூஜைகள் மேற்கொள்ள பெரும் பொருளுதவியை வாரி வழங்கியுள்ளனர். இரண்டாம் குலோத்துங்க சோழன் கோயிலை நிர்வகிக்க குழு அமைத்து உத்தரவிட்டு, அதனை செயல்படுத்தியுள்ளார்.

ஆனால் தற்போது ஆகம விதிமுறைப்படி பூஜைகள் செய்வது, திருவிழாக்களை நடத்துவது  உள்ளிட்ட பணிகளை தீட்சிதர்களே  செய்கின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை கோயில்  தீட்சிதர்கள் தங்களுக்குள் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளை இதற்காக தேர்வு செய்து  கொள்கின்றனர். அதுபோல் கோயில் திருவிழாக்களை நடத்துவதற்கு தங்களுக்குள் ஒருவரை உற்சவ ஆச்சாரியாராக தேர்வு செய்து கொள்கின்றனர். இது போன்ற சூழலில் தீட்சிதர்களின் செயல்பாடுகள் மீது தொடர்ச்சியாக  பல்வேறு புகார்கள் எழுந்ததன் விளைவாக 1987ம் ஆண்டு தமிழக அரசு செயல் அலுவலர் ஒருவரை நியமித்தது. இதனை  எதிர்த்து தீட்சிதர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு  தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில்  கோயிலை நிர்வகிக்க இந்துசமய அறநிலையத்துறை செயல் அலுவலரை நியமித்து நிர்வாகம் செய்யலாம் என தீர்ப்பளிக்கப்பட்டது. தொடர்ந்து கோயிலுக்கு உள்ளேயே செயல் அலுவலர்  அலுவலகம் திறக்கப்பட்டது. இதையடுத்து கோயிலின் பல்வேறு இடங்களில்  உண்டியலும் வைக்கப்பட்டது. இதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள்  குறிப்பிட்ட கால இடைவெளியில் எண்ணப்பட்டு வங்கிக் கணக்கில் இருப்பு  வைக்கப்பட்டது. இருப்பினும்  தீட்சிதர்கள் தங்களது வழக்கப்படி கோயில் பூஜைகளை நடத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தீட்சிதர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் தீர்ப்பு அளித்தது.  தமிழக அரசு செயல் அலுவலர் நியமித்தது  தவறானது. நிர்வாகத்தை தீட்சிதர்கள் மேற்கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்தது. கோயில் நிர்வாகப் பொறுப்புகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோயில்  தீட்சிதர்களிடம் ஒப்படைத்தனர். அப்போது நிர்வாகம் பார்த்த நாட்களில்  வரப்பட்ட நன்கொடைகள், உண்டியல் மூலம் வரப்பெற்ற வருவாய், தங்கம், வெள்ளி  நகைகள் மற்றும் உண்டியல் பணம் உள்ளிட்ட அனைத்தும் நீதிமன்ற உத்தரவுப்படி  கோயில் தீட்சிதர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தீர்ப்பில், பொது தீட்சிதர்கள் மத சீர்மரபினர்,  அதனால் அரசியல் சாசன பிரிவு 24ன் கீழ் வழங்கப்படும் பாதுகாப்பு  தீட்சிதர்களுக்கும் பொருந்தும். அதனால் அவர்களே சிதம்பரம் கோயிலை  நிர்வகிக்கலாம் என்ற தீர்ப்பு மேற்கோள் காட்டப்பட்டது.  இருப்பினும் தீட்சிதர்கள் மீதான புகார்கள் குறையவில்லை.

மாறாக அதிகரித்தது. கோயிலுக்கு வரும் பக்தர்களை தாக்குவது,  தீட்சிதர்களுக்குள் மோதல், சக தீட்சிதர்களை  தாக்குவது, பக்தர்களை சாதிப் பெயரைச் சொல்லித் திட்டுவது, கோயில் கனகசபை மீது  ஏறுவதற்கு தடைவிதிப்பு, தேவாரம், திருவாசகம் பாட தடை என அடுக்கடுக்கான புகார்கள் அரசுக்கு சென்றது. புகார்களை விசாரிக்க தமிழக அரசின் ஆய்வுக்குழு சென்றபோது தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒத்துழைக்க மறுத்தனர். சாமி தரிசனம் செய்து விபூதி பூசி விட்டதோடு சரி, வேறு எங்கும் ஆய்வு நடத்தவோ, யாரிடமும் விசாரிக்கவோ குழுவை அனுமதிக்கவில்லை. சட்ட வழிகளை காண்பித்து 3 நாட்களாக குழுவை அலைகழித்து தீட்சிதர்கள் திருப்பி அனுப்பி வைத்தனர். வெளிப்படையான நிர்வாகத்துக்கு ஒத்துழைக்காத தீட்சிதர்களுக்கு அனைத்து தரப்பில் இருந்து கண்டனங்கள் எழும்பி வருகிறது. தமிழக அரசு கோயிலை கையகப்படுத்த தனிச்சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று என்ற அடிப்படையில் சிவனின் பஞ்சப்பூத கோயில்களில் ஆகாய தலத்தை குறிப்பது சிதம்பரம் நடராஜர் கோயில், இறைவன் இங்கு  ஆகாய வடிவில் காட்சியளிப்பதாக ஐதீகம்.   ஒரு  காலத்தில் தில்லை, மரங்கள் சூழ்ந்த தில்லை வனமாகத்தான் சிதம்பரம் இருந்தது. எனவே, அதற்கு தில்லை என்ற மறு பெயரும் உண்டு.

இறைவன் பெயரிலே பொய் கணக்கா?
சிதம்பரம் நடராஜர் கோயிலின் கணக்கு வழக்குககளில் முறையான கண்காணிப்பு இல்லாததால், கண்ணில் பட்டதெல்லாம்   எங்களுக்குத்தான் சொந்தம் என்கிற கணக்கில் தீட்சிதர்களின் செயல்பாடுகள் அமைந்து வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.  எந்த வரையறையும் இல்லாமல், தமிழ் மன்னர்கள் கட்டியமைத்த மாபெரும் கோயிலை முன் வைத்து முழுக்க வியாபாரம் நடத்துவதாகவே பக்தர்கள் கொந்தளிக்கின்றனர். கோயிலில் அனைத்தும் சரியாக நடக்கிறது.  எல்லாவற்றுக்கும் கணக்கு வைத்திருக்கிறோம் என்று தீட்சிதர்கள் சொன்னால், வெளிப்படையாக கூற வேண்டியதுதானே? அரசு அதிகாரிகள் கேட்கும் கணக்கு, வழக்குகளை வெளிப்படையாக பொதுவெளியில் வெளியிடலாமே, இதனை எப்போதும் செய்ததில்லையே ஏன்? என்று கேட்டால் இறைவனே எல்லாவற்றுக்கும் தலைவர், அவரிடமே சொல்கிறோம் என்பதில் நியாயமில்லை.  தமிழக அரசு ஒரு குழுவை  அமைத்துள்ளது. அந்தக் குழுவிற்கு தீட்சிதர்கள் ஒத்துழைக்காதது,  அரசாங்கத்தையே எதிர்ப்பதாகத்தான் அர்த்தம்.  எனவே, தமிழக அரசு நடராஜர்  கோயிலுக்கென ஒரு தனிச்சட்டத்தை இயற்றி கோயிலை இந்து சமய அறநிலையத்துறை  கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதே பெரும்பாலான பக்தர்கள்,  சிவனடியார்கள், பொதுமக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

பக்தர்களுக்காக நேரில் வரும் நடராஜர்
தமிழகத்தில் உள்ள அனைத்து கோயிலிலும் மூலவர் வீற்றிருக்க,  உற்சவரே திருவிழா காலங்களில்  வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்  பாலிப்பார். ஆனால் நடராஜர் கோயில் விதிவிலக்கு.  ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் ஆனித்திருமஞ்சன  திருவிழாவும், மார்கழி  மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறும். அந்தக்  காலங்களில் மூலவரான  நடராஜரே தேரில் ஏறி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வேறு எந்த ஊரிலும் இந்த நடைமுறை இல்லை. நடராஜர்  வீற்றிருக்கும் பொன்னம்பல  கூரை தங்கத்தால் வேயப்பட்டது. இந்த  கூரையில் பதிக்கப்பட்டுள்ள  21  ஆயிரத்து 600 ஓடுகள் மனிதன் ஒரு நாளைக்கு விடும் மூச்சுக்  காற்றின்   எண்ணிக்கையை குறிக்கின்றன. கூரையை இணைக்க  பயன்படுத்தப்பட்ட 72   ஆயிரம் தங்க ஆணிகள் மனிதனின் சுவாச ஜீவ நாடிகளின்  எண்ணிக்கையை உணர்த்துகின்றன. பொன்னம்பலத்தில் உள்ள 64 கைம்மரங்கள் 64  கலைகளையும், 9 தங்கக் கலசங்கள் நவசக்திகளையும் குறிப்பதாக  சொல்லப்படுகிறது.

தீட்சிதர்கள் யார்?
சிதம்பரத்துக்கு தில்லைவாழ் அந்தணர்கள் என்று கூறப்படும் தீட்சிதர்கள் எங்கே? எப்படி வந்தார்கள்? என  கேட்கும்போதெல்லாம், அவர்கள் கூறும் செவி வழி கதை, பல்வேறு ஐயத்தையும் வரவழைக்கிறதாம். கைலாய மலையில் இருந்து இறைவனே தனக்கு சேவை செய்ய அவர்களை அழைத்து வந்திருப்பதாக தீட்சிதர்கள் பெருமையோடு கூறிக்கொள்கின்றனர். அப்படி 3   ஆயிரம் பேர் வந்ததாகவும், அப்போது அதில் ஒருவரை காணவில்லை என  தேடியபோது   வானத்திலிருந்து ஒலித்த அசரீரி குரல், நான் இங்கேதான் இருக்கிறேன் எனகூறியது. அந்த காணாமல் போன தீட்சிதர் நடராஜர்தான்  எனவும் கூறி முடித்துக்கொண்டனர். எனவே நடராஜரும் தங்களில் ஒருவர்தான் என்றும், ஒவ்வொரு முறை கூட்டம் நடத்தும்போதும்,  நிர்வாக  முடிவுகளை எடுக்கும்போதும் நடராஜரையே தங்களது தலைவராக எண்ணி,   அனைத்து  நிர்வாக முடிவுகளையும் எடுத்து வருவதாக கூறுகின்றனர்.

தீட்சிதர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு?
நடராஜ பெருமான் ஆலய சோழ வம்சாவழி சமூக ஆன்மிக அன்னதான அறக்கட்டளை நிறுவன தலைவர் கோவி. மணிவண்ணன் கூறுகையில்,  சிதம்பரம் நடராஜர் கோயிலை நிர்வகித்து வரும் தீட்சிதர்கள், சக  தீட்சிதர்களை தாக்குகிறார்கள், சாதிப்பெயரை சொல்லி தாக்குகிறார்கள்.  இவர்கள் மீது சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்து குற்ற  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தீட்சிதர்கள் இதுவரை கைது  செய்யப்படவில்லை. பல்வேறு விதிமீறல்களை செய்து வருகின்றனர். தீட்சிதர்களின் வங்கிக் கணக்கு, ஆதார் கார்டு, பான் கார்டு ஆகியவற்றை ஆய்வு செய்து அவர்களது சொத்துக்களை கணக்கீடு செய்து மதிப்பீடு செய்ய  வேண்டும். நடராஜர் கோயில் குறித்து தமிழக அரசு முழுமையான ஆய்வு செய்து  தீட்சிதர்கள் மோசடிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து கோயிலை  தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றார்.   சமூக செயற்பாட்டாளர் ரமேஷ்பாபு கூறுகையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் அத்து மீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால்  இந்த நகருக்கே அவப்பெயர் ஏற்படுகிறது.  

தேவாரம், திருவாசகம்  பாடுவதற்கு தீட்சிதர்கள் தடை விதிக்கிறார்கள். பொற்கூரை மீது காலை வைத்து  ஏறுகிறார்கள். ஆயிரங்கால் மண்டபத்தை அலங்கரித்து ஆடம்பர திருமணம்  செய்கிறார்கள். இப்போது கணக்கு வழக்குகளை பார்க்க வந்த அறநிலையத்துறை  அதிகாரிகளை அனுமதிக்க மறுத்துள்ளனர். கோயிலில் அநீதி நடந்தால்  அதில் தலையிடலாம். தமிழக அரசுக்கு இது ஒரு நல்ல நேரம். அதனால் தமிழக அரசு  உரிய நடவடிக்கை எடுத்து கோயிலுக்கான தனிச்சட்டத்தை இயற்றி கோயிலை  கையகப்படுத்தி மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார்.

Tags : Natarajar ,Chidambaram ,Dixit , Natarajar Temple and the secret of Chidambaram ... Dikshitars' controversies and cases ...: Unpublished information exposed
× RELATED சிதம்பரம் கோயில்: பிரமோற்சவம் நடத்தக்கோரி வழக்கு