×

இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்களை வேறு துறைகளுக்கு பயன்படுத்தக்கூடாது: அரசின் மேல் முறையீடு வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை மீன்வளத் துறை மற்றும் போக்குவரத்துத் துறை ஆகியவற்றிற்கு மாற்றிய உத்தரவுகளை ரத்து செய்த தனி நீதிபதியின் தீர்ப்பு சரியானதுதான் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள சக்தி முத்தம்மன் கோயிலுக்கு சொந்தமான 2.03 ஏக்கர் நிலம் இந்துசமய அறநிலையத் துறை அனுமதி இல்லாமல் 1963ம் ஆண்டு மீன்வளத் துறைக்கு மாற்றப்பட்டது. அதில், ஐஸ் உற்பத்தி நிலையம் மற்றும் மீன்களை பாதுகாப்பதற்கான கட்டடம் ஆகியவை கட்டப்பட்டன.  அதேபோல, சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான 1.15 ஏக்கர் நிலம்,  கடந்த 2018ம் ஆண்டு அறநிலையத்துறை அனுமதி இல்லாமல் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

 அரசின் இந்த உத்தரவுகளை எதிர்த்து கோயில் நிர்வாகங்கள் சார்பிலும், பக்தர்கள் குகன், தர், ராதாகிருஷ்ணன் ஆகியோர் சார்பிலும் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், அறநிலையத்துறை கோயில்களின் நிலங்களை கோயில் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு மாற்றக்கூடாது என கூறி அரசின் உத்தரவுகளை ரத்து செய்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  கோயில்களுக்கு சொந்தமான நிலம் அவற்றின் பயன்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

எனவே, மற்ற பயன்பாட்டிற்கு கோயில் நிலங்களை மாற்றக்கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவில் தவறில்லை. அறநிலையத்துறை அனுமதி இல்லாமல் நிலத்தை மாற்றிய உத்தரவு ரத்து செய்யப்பட்டது சரிதான். அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கோயில்களை நிலத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர அறநிலையத்துறை நடவடிக்கைகளை தொடங்கலாம்.  அரசின் மேல்முறையீட்டு வழக்குகள்  முடித்துவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.



Tags : Hindu Charitable Trusts ,State , Under the control of the Hindu Charitable Trusts The temple lands are different Not to be applied to departments: Order of the iCourt in the State Appeal case
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...