×

பட்டா பெயர் மாற்றத்திற்காக 7 ஆயிரம் வாங்கிய வி.ஏ.ஒ கைது

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டம் கிருஷ்ணமராஜாகுப்பம் கிராம நிர்வாக அலுவலர் மணி (51). இதில், கோரகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி  விஸ்வநாதன்.  இவரது தந்தை பெயரில் உள்ள  89 சென்ட் விவசாய நிலத்தை பெயர் மாற்றம் செய்ய பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த ஜமாபந்தியில் மனு செய்திருந்தார். இதனை தொடர்ந்து,  கிராம நிர்வாக அலுவலருக்கு விசாரணைக்காக அனுப்பப்பட்டிருந்தது. பட்டா பெயர் மாற்றம் செய்து தர ₹10 ஆயிரம்  தரவேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர் கேட்டதாகவும், இருப்பினும் பணம் தர விருப்பம் இல்லாத விவசாயி விஸ்வநாதன் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறியபடி,  ரசாயனம் தடவிய ₹7ஆயிரம் பணத்தை கிராம நிர்வாக அலுவலர் மணியிடம்  வழங்கி உள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த  லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. கலைச் செல்வம், ஆய்வாளர் அண்ணாதுரை ஆகியோர் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிடித்து  கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து ₹ 7ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.  பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக  பணியாற்றி வந்த மணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புதான் பதவி உயர்வு பெற்று கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : VAO ,Patta , VAO arrested for buying Rs 7,000 for Patta name change
× RELATED புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!