×

திருவள்ளூர் நகராட்சி நடுநிலை பள்ளியில் எம்எல்ஏ ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பத்தில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார். 3 வகுப்பறைகள், கழிவறை மற்றும் ஸ்மார்ட் வகுப்பறை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எம்எல்ஏ உறுதியளித்தார். திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 22 வது வார்டு பெரியகுப்பத்தில் உள்ளது நகராட்சி நடுநிலைப் பள்ளி. 1 முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 275 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.  இந்நிலையில் இந்த நகராட்சி நடுநிலைப் பள்ளியை எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் நேற்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக பள்ளியின் மாடியில் தேங்கியிருந்த மழை நீரை உடனடியாக அகற்ற நகராட்சி ஊழியர்களுக்கு எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் உத்தரவிட்டார். மேலும், வகுப்பறையில் பாடம் நடத்தி்க் கொண்டிருந்த போது பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடினார். ஸ்மார்ட் கிளாஸிலும் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது அங்கும் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து தற்போது மாணவர்களின் வசதிக்காக கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும்,  கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் ஸ்மார்ட் வகுப்பறை இருந்தால் வசதியாக இருக்கும்  என பள்ளியின் தலைமை ஆசிரியர் திரிவேணி எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரனிடம் கோரிக்கை விடுத்தார். பள்ளியின் தலைமை ஆசிரியரின் கோரிக்கையை ஏற்ற எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் அரசிடம் பேசி விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்த ஆய்வின் போது நகர்மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன், நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி, வட்டாரக் கல்வி அலுவலர் வீரராகவன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் பொன்.பாண்டியன், நகர் மன்ற உறுப்பினர்கள் சித்ரா விசுவநாதன், விஜயலட்சுமி கண்ணன், தனலட்சுமி மற்றும் நகராட்சி பொறியாளர் நாகராஜன், ஓவர்சியர் சீனிவாசன் உள்பட பலர் உடன் இருந்தனர்.



Tags : MLA ,Tiruvallur Municipal Middle School , MLA study at Tiruvallur Municipal Middle School
× RELATED திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவு...