அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடையில்லை, கட்சியின் அடிப்படை விதிகளை திருத்தவும் தடையில்லை: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடையில்லை, கட்சியின் அடிப்படை விதிகளை திருத்தவும் தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக விதிகளை திருத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற ஓபிஎஸ் தரப்பு முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவை நடத்தவும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் போன்ற விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை எனஉயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் உள்ள நிலையில் தேவையில்லாமல் நடத்தப்படும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் தரப்பினர் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. ஓபிஎஸ் தரப்பில் அரவிந்த் பாண்டியன், ஈபிஎஸ் தரப்பில் விஜயநாராயணன், எஸ்.ஆர்.ராஜகோபால், மனுதாரர்கள் தரப்பில் மொத்த வழக்கறிஞர்கள் பி.எஸ். ராமன், ஜி.ராஜகோபால், என்.ஜி.ஆர்.பிரசாத் வாதிட்டனர்.

அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்; 23 வரைவு தீர்மானங்களுடன் கட்சி அலுவலகத்தில் இருந்து இ மெயில் வந்தது; அதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளேன். 23 வரைவு தீர்மானங்களை தவிர வேறு எந்த அஜெண்டாவையும் அனுமதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுவிட்டது என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எடப்பாடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்; பொதுக்குழு தான் கட்சியின் உச்சபட்ச அமைப்பு என்பது கட்சி விதி. ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ அல்ல. பொதுக்குழுவில் இது நடக்கும், இது நடக்காது என உத்தரவாதம் அளிக்க முடியாது; நாளை திருத்தம் நடக்கலாம். நடக்காமலும் போகலாம்... பொதுக்குழுவில்தான் உறுப்பினர்களின் விருப்பம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய ஓபிஎஸ் தரப்பினர்; கொள்கைகளை உருவாக்குவது உள்ளிட்ட அனைத்திற்கும் பொதுக்குழுவுக்கே அதிகாரம். எந்த விதியையும் சேர்க்கவோ, நீக்கவோ 2665 உறுப்பினர்கள் கொண்ட பொதுக்குழுவால் முடியும். பொதுக்குழுவில் இது நடக்கும், இது நடக்காது என உத்தரவாதம் அளிக்க முடியாது. பொதுக்குழுவில்தான் உறுப்பினர்களின் விருப்பம் அறிவிக்கப்படும்; இது ஜனநாயக நடைமுறை. வழக்கமான முறையில் பொதுக்குழு நடக்கலாம்; தலைமையில் மாற்றம் கோரும் தீர்மானங்கள் கூடாது என தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்து பேசிய எடப்பாடி தரப்பினர்; பொதுக்குழு தான் கட்சியின் உச்சபட்ச அமைப்பு; ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ அல்ல. நாளை கட்சி விதிகளில் திருத்தம் நடக்கலாம், நடக்காமலும் இருக்கலாம். பொதுக்குழுவில் தான் உறுப்பினர்களின் விருப்பம் அறிவிக்கப்படும்.

ஓபிஎஸ்: ஓ.பி.எஸ் ஒப்புதல் அளித்த வரைவு தீர்மானத்தில் ஒற்றைத்தலைமை குறித்த விவகாரங்கள் இல்லை; இதுகுறித்து பொதுக்குழுவில் புதிதாக எதுவும் சேர்க்கக் கூடாது.

ஈபிஎஸ்: பொதுக்குழுவில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், உத்தரவாதம் அளிக்க முடியாது. பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களின் விருப்பப்படியே முடிவுகள் எடுக்கப்படும்

ஓபிஎஸ்: எந்த உறுப்பினரும் பொதுக்குழு கூட்டத்தில் குரல் எழுப்பலாம் என்பதற்கான விதிகளை காட்ட வேண்டும்

ஈபிஎஸ்: கட்சி விதிகளை திருத்த யாரிடமும் அனுமதி பெறவேண்டியதில்லை. தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தால் போதும்.

ஓபிஎஸ்: பொதுக்குழுதான் அனைத்தையும் முடிவு செய்யும் என்பது சரியானதுதான். ஆனால் அங்கு என்ன முடிவெடுப்பது என்பதை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் முடிவு செய்ய முடியும். நேற்று அனுப்பிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்து அனுப்பி விட்டேன். வேறு அஜெண்டா ஏதும் இருந்தாலும் இருவரும் சேர்ந்துதான் முடிவெடுக்க வேண்டும்.

ஈபிஎஸ்: கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகத்திற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரே பொறுப்பு; பொதுக்குழு நிகழ்ச்சி நிரலை இருவரும்தான் முடிவு செய்ய முடியும்.

ஓபிஎஸ்: என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற எண்ணத்தில் பொதுக்குழுவுக்கு செல்ல முடியாது; நடக்கப்போவது என்ன என்பது ஒருங்கிணைப்பாளருக்கு முன்கூட்டியே தெரிய வேண்டும். ஒருங்கிணைப்பாளருக்கு தெரியமால் எந்த தீர்மானத்தையும் வைக்க முடியாது.

நீதிபதி: திடீரென பொதுக்குழுவில் ஏதாவது விவகாரத்தை எழுப்ப வேண்டுமென யாராவது சொன்னால் என்ன செய்வது?

ஓபிஎஸ்: ஒரு விவகாரத்தை முன்மொழிவது என்பது வேறு, அதனை எழுப்புவது என்பது வேறு.

நீதிபதி: மனுதாரர்கள் அனைவரும் பொதுக்குழு கூட்டம் நடத்தலாம்; கட்சி விதிகளில் மட்டும் திருத்தம் செய்யக்கூடாது என மனுதாரர்கள் வலியறுத்தியுள்ளனர் என தெரிவித்தனர். அதிமுக பொதுக்குழு குறித்து 3 மனு நேரமாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்பினர் இடையே காரசார வாதம் நடைபெற்றது. தொடர்ந்து வழக்கு மீதான தீர்ப்பு சற்று நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

தீர்ப்பு: அனைத்து தரப்பினரும் பொதுக்குழு கூட்டத்தை நடத்த எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் ஒருங்கிணைப்பாளரும், மற்ற மனுதாரர்களும் கட்சி விதிகளை திருத்தம் செய்ய, குறிப்பாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைப்பது தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றவே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதற்கான முகாந்திரத்தை நிரூபிக்கவில்லை. இதுபோன்ற தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற அச்சத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பொதுக்குழு கூட்டத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த நீதிமன்றம் யூகித்து முன்கூட்டியே உத்தரவு பிறப்பிக்க முடியாது. கட்சி மற்றும் சங்க விவகாரங்களில் நீதிமன்றம்  பொதுவாக தலையிடுவதில்லை. நிர்வாக வசதிக்காக சட்ட திட்டங்களை கட்சியால் திருத்தம் செய்ய முடியும். பொதுக்குழுவில் என்ன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை முடிவு செய்வது கட்சிதான். அதில் நீதிமன்றம் தலையிட முடியாது.

அதனால் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க நீதிமன்றம் விரும்பவில்லை. மேலும் வழக்கில் ஒ.பி.எஸ்., இ.பி.எஸ்., பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பதிலளிக்க வேண்டும். வழக்கு ஜூலை 11- ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கூறினார்.

Related Stories: