×

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் தலைமையிலான தமிழ்நாடு சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்களின் குழு ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சருடன் சந்திப்பு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி, புதுடெல்லியில் இன்று தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான தமிழ்நாடு சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்களின் குழு ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் அவர்களை சந்தித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கக் கூடாது என்றும், கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்பதையும் வலியுறுத்தி கோரிக்கை மனுவினை வழங்கினர். பின்னர் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சருடன் தமிழக குழுவினர் மேகதாது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்

இக்கூட்டத்தில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், வைகோ, மு. தம்பித்துரை, ஏ.கே.பி. சின்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.க. மணி, கு. செல்வப்பெருந்தகை, எஸ்.எஸ். பாலாஜி, நயினார்  நாகேந்திரன்,  தி. இராமசந்திரன், பி. சண்முகம், எம்.எச். ஜவாஹிருல்லா, தி. வேல்முருகன், எம். ஜெகன்மூர்த்தி மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர்/தலைமை உள்ளுறை ஆணையர் முனைவர். அதுல்ய மிஸ்ரா,  நீர்வளத்துறை  கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் சாட்டர்ஜி, காவேரி தொழில் நுட்பக் குழு மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு தலைவர் ஆர். சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு, மாண்புமிகு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மாண்புமிகு ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் அவர்களுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. மேகதாது பற்றி காவிரி நதிநீர் ஆணையம் விவாதிக்கக்கூடாது என்பதே எங்களது முக்கிய கோரிக்கையாக இருந்தது.

மேகதாது பற்றி பேசுவதற்கு நதிநீர் ஆணையத்திற்கு எவ்வித அதிகார வரம்பும் இல்லை என்று நாங்கள் குறிப்பிட்டோம். ஆனால், அவர்களுக்கு உரிமை உள்ளது என  வழக்கறிஞரிடம் கருத்து பெற்றுள்ளனர். அதேபோல் நாங்களும் சட்ட வல்லுநர்களிடம் கலந்து ஆலோசித்ததில் அந்த கருத்து சரியானதல்ல என தெரிவித்தோம். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்பதை வலியுறுத்தினோம்.

ஒன்றிய அரசின் ஜல்சக்தி துறை அமைச்சர் எங்களிடம் முன்னரே பலமுறை உறுதி அளித்துள்ளபடி, தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் காவிரியில், கர்நாடக அரசு எந்த ஒரு அணையும் கட்ட முடியாது என்ற கருத்தை அவர்கள் உறுதி செய்துள்ளார் என தெரிவித்தார்.

Tags : Tamil Nadu Assembly ,All Group of Leaders ,Tamil Nadu ,Water Resources ,Minister ,Union Minister of , Meeting with the Minister of Water Resources of the Union Government, a delegation of all party leaders of the Tamil Nadu Legislative Assembly headed by the Minister of Water Resources of Tamil Nadu
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...