24ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி அரியநாச்சி அம்மன் கோயிலுக்கு சாலை அமைக்கும் பணி துவக்கம்

சாயல்குடி: கடலாடி, முதுகுளத்தூர் சாலையிலிருந்து பிரிந்து ஆப்பனூர் வழியாக கிடாத்திருக்கை செல்ல பிரதான சாலை உள்ளது. இச்சாலையை ஆப்பனூர், அரியநாதபுரம், தெற்குகொட்டகை, பறையங்குளம், கிடாத்திருக்கை, கொண்டுலாவி, பிடாரினேந்தல், பொதிகுளம் குடியிருப்பு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமமக்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் பிரசித்தி பெற்ற அரியநாச்சிஅம்மன் கோயில் உள்ளது.

இந்தநிலையில் அம்மன் கோயில் அமைந்துள்ள மேற்குபுறம் ஆப்பனூர்-கிடாத்திருக்கை சாலையிலிருந்து பிரிந்து செல்லும் பாதையில் மலட்டாறு கால்வாய் செல்கிறது. இதன்மேல் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பாலம் பகுதி சேதமடைந்துள்ளது. பாலம் முதல் கோயில் வரை சாலையின்றி மண் சாலை உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியவில்லை.

இந்தநிலையில் வருகின்ற 24ந்தேதி வெள்ளிக்கிழமை இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. எனவே நூற்றுக்கணக்கானோர் நலன் கருதி கடலாடி யூனியன் நிர்வாகம் சார்பாக சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து ஆப்பனூர் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் மெட்டல்சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டது. இதுகுறித்து ஆப்பனூர் பஞ்சாயத்து தலைவர் புஷ்பம்ராஜபாண்டியன் கூறுகையில், ஆப்பனூர்-கிடாத்திருக்கை சாலை சந்திப்பிலிருந்து அரியநாச்சி அம்மன் கோயிலுக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் சுமார் 165 மீட்டர் தூரத்திற்கு மெட்டல் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. நாளைக்குள் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வந்து விடும். மேலும் கும்பாபிஷேகம் விழாவிற்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் நலன் கருதி சுற்றுப்புறங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது. குடிநீர், கழிவறை, வாகன நிறுத்தும் இடம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: