×

சென்னையில் விடிய விடிய மழை செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சென்னை: சென்னையில் விடிய விடிய பெய்த தொடர் மழையால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்பட்டுள்ள உபரி நீரின் அளவு 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 3.6 டி.எம்.சி. கொள்ளளவு கொண்டது. இதன் நீர் மட்டம் 24 அடியாகும். காட்ரம்பாக்கம், மலையம்பாக்கம், சிறுகளத்துார், காவனுார், குன்றத்துார் ஆகிய 5 ஊர்களின் எல்லையில் இந்த ஏரி அமைந்துள்ளது.

தற்போது இந்த ஏரிக்கு, கிருஷ்ணா நீர் வரத்து அதிகரித்துள்ளதாலும், கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் பெய்த தொடர் கனமழை காரணமாகவும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 23.60 அடியாக உள்ளது. மொத்த கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில் 3,640 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.

 அதே நேரம் நீர்வரத்து 775 கனஅடியாக உள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், பாதுகாப்பு கருதி முதல் கட்டமாக நேற்று பிற்பகல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 250 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு பெய்த தொடர் கனமழை காரணமாகவும், கிருஷ்ணா நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்தானது 775 கன அடியாக உயர்ந்துள்ளது.

 இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று காலை 9 மணி அளவில் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் 250 கனஅடியில் இருந்து 500 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், திருமுடிவாக்கம், வழுதலம்பேடு, நந்தம்பாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்னும் நீர்வரத்து அதிகரிக்குமானால் அதற்கு ஏற்றவாறு படிப்படியாக நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புழல் ஏரியும் திறக்க வாய்ப்பு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்களாக சென்னையை சுற்றி 5 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரியில் 1,087 மில்லியன் கனஅடியும், சோழவரம் ஏரியில் 138 மில்லியன் கனஅடியும், புழல் ஏரியில் 3,117 மில்லியன் கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 3,640 மில்லியன் கனஅடியும், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரியில் 433 மில்லியன் கனஅடி என மொத்தம் 8,315 மில்லியன் கனஅடியாக உயர்ந்துள்ளது. மொத்தமாக 8 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. இதில் புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,300 மில்லியன் கன அடியில் 3,117 மில்லியன் கனஅடியை எட்டியுள்ளது. இதனால் புழல் ஏரியில் இருந்தும் உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Lake Semperambakkam ,Chennai , Vidya Vidya rain, Sembarambakkam lake, increase in water opening, flood risk warning
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...