தமிழகத்தில் முதற்கட்டமாக 50 உழவர் சந்தைகளில் மின்னணு தகவல் பலகைகள்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று சேப்பாக்கம், தோட்டக்கலை துறை இயக்குநரகத்தில் உழவர் சந்தை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறி, பழங்களை இடைத்தரகர்கள் குறுக்கீடு இன்றி நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்கு ஏதுவாக 1999-2000 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உழவர் சந்தை என்கிற கனவுத் திட்டம் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

 

· மொத்த உழவர் சந்தைகள் 180,

· செயல்பட்டு வரும் உழவர் சந்தைகள் 172,

· நாள் ஒன்றுக்கு சராசரி வரவு 1866 மெ.டன்.,

· நாள் ஒன்றுக்கு காய்கறி மற்றும் பழங்கள் வரத்தின் மதிப்பு ரூ. 5.99 கோடி,

· நாள் ஒன்றுக்கு பயனடையும் விவசாயிகளின் எண்ணிக்கை 7,219

· நாள் ஒன்றுக்கு பயனடையும் நுகர்வோர்களின் எண்ணிக்கை 2.95 லட்சம்.   

இதில் 5 மெ. டன் வரை தினசரி காய்கறி மற்றும் பழங்கள் வரத்து வரும் 50 உழவர் சந்தைகளுக்கும், 10 மெ.டன் வரை தினசரி வரத்து வரும் 60 உழவர் சந்தைகளுக்கும், 30 மெ.டன் வரை தினசரி வரத்து வரும் 52 உழவர் சந்தைகளுக்கும் தினசரி வரத்து அதிகமாக வரும் வகையில் உழவர் சந்தையை சுற்றியுள்ள கிராமப் பகுதியில் காய்கறி சாகுபடியினை அதிகப்படுத்திட தோட்டக்கலை துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.  மேலும், ஒவ்வொரு சனிகிழமையிலும் தோட்டக்கலை மற்றும் வேளாண் விற்பனை அதிகாரிகள் கூட்டாக சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று காய்கறிகள் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க மாண்புமிகு அமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.  

உழவர் சந்தைகளுக்கு காய்கறிகளின் வரத்தை அதிகரிக்க ஒவ்வொரு உழவர் சந்தைக்கும் தோட்டக்கலை துறையின் சார்பில் நியமிக்கப்பட்ட பொறுப்பு அலுவலர்களின் (தோட்டக்கலை உதவி இயக்குநர்/ தோட்டக்கலை அலுவலர்) பணிகள் ஆய்வு செய்து காய்கறி மற்றும் பழங்களின் வரத்தை அதிகரிக்க மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவுரை வழங்கினார்கள். 2022-23 நிதிநிலை அறிக்கையின்படி, தோட்டக்கலை துறைக்கு காய்கறி விதைகள், நாற்றுகள், உயிர் உரங்கள் மற்றும் பழச்செடிகளை விற்பனை செய்ய 50 உழவர் சந்தைகளில் கடைகள் ஒதுக்கப்பட்ட பணிகள் குறித்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆய்வு செய்தார்கள். மேலும், உழவர் சந்தைகள் விற்பனை மையமாக மட்டுமின்றி, உழவர்களுக்கு உதவும் வகையில் தொழில்நுட்பத் தகவல் பரிமாறும் மையமாக செயல்படுவது குறித்தும்,

விவசாயிகளின் நலனுக்காக, உழவர் சந்தைகளில் மாதமிருமுறை விழிப்புணர்வுக் கூட்டம் மற்றும் பயிற்சி நடத்துவது குறித்தும் ஆய்வு செய்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவுரை வழங்கினார்கள். புதிதாக துவங்க இருக்கும் 14 உழவர் சந்தைகளின் கட்டுமான பணி முன்னேற்றம் குறித்தும், அதை விரைவில் துவங்க நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.  மேலும், 27 உழவர் சந்தைகளில் உள்ள 2 மெ. டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன அறைகளை விவசாயிகளுக்கு இலவசமாக பயன்படுத்திட ஏதுவாக உரிய விளம்பரம் செய்ய அமைச்சர் அவர்கள் அறிவுரை வழங்கினார்கள்.  

உழவர் சந்தைகளை மாலையில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான சாத்திய கூறுகளும் இவ்வாய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இவ்வரசு பொறுப்பேற்ற பின் 100 உழவர் சந்தைகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த எடுத்த நடவடிக்கையின் மூலம் இதுவரை 50 உழவர் சந்தைகளின் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 50 உழவர் சந்தைகளின் அடிப்படை கட்டமைப்பு பணிகளை துரிதப்படுத்தி முடித்திட மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவுரை வழங்கினார்கள். தமிழகத்திலுள்ள அனைத்து உழவர் சந்தைகளும் நல்ல முறையில் செயல்பட தோட்டக்கலைத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கியதுடன் தமிழகத்தில் முதற்கட்டமாக 50 உழவர் சந்தைகளில் மின்னணு தகவல் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது எனவும் படிப்படியாக இந்த வசதி அனைத்து உழவர் சந்தைகளிலும் விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவித்தார்கள்.   

இக்கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர், திரு. சி. சமயமூர்த்தி, இ.ஆ.ப., தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் இரா. பிருந்தா தேவி, இ.ஆ.ப., வேளாண் துறை இயக்குநர் திரு. அ. அண்ணாதுரை, இ.ஆ.ப., வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை இயக்குநர் முனைவர் எஸ். நடராசன், இ.ஆ.ப., மற்றும் தோட்டக்கலை துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை உயர் அலுவலர்கள் மற்றும் உழவர் சந்தைகளின் களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

Related Stories: