ஊழல், லஞ்சப் புகாரில் சிக்கிய 45 அதிகாரிகள் போலீசார் கைது: பஞ்சாப் முதல்வர் அதிரடி

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் ஊழல், லஞ்சப் புகாரில் சிக்கிய 45 அதிகாரிகள், போலீசார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதாக விஜிலென்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முதல்வர் பகவந்த் மான் கடந்த சில மாதங்களுக்கு முன் பதவியேற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஊழல், லஞ்சம், போதை பொருள் கடத்தல் ஆகிய புகாரில் சிக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அந்த வகையில் பஞ்சாப் விஜிலென்ஸ் போலீசார் வெளியிட்ட அறிக்கையில்:

பகவந்த் மான் முதல்வராக பதவியேற்ற பின்னர், ஊழல் குற்றச்சாட்டின் பேரில் இதுவரை 45 அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊழலுக்கு எதிராக மக்கள் தங்கள் புகார்களை அளிக்க வாட்ஸ்அப் எண்கள், ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டார். அதன்படி வாட்ஸ் அப், ஹெல்ப் லைன் மூலம் பெறப்பட்ட தகவல்களின் பேரில் ஊழல் அதிகாரிகள்  மற்றும் பிற குற்றவாளிகளுக்கு எதிராக 28 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுவரை காவல் துறையில் இன்ஸ்பெக்டர் ஒருவர், 8 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், 3 தலைமை காவலர்கள், ஒரு கான்ஸ்டபிள், ஒரு போலீஸ் ஹோம் கார்டு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பள்ளிக் கல்வித்துறையில் அரசு ஐடிஐயின் முதல்வர், மருத்துவ அதிகாரி, கோட்ட வன அலுவலர் மற்றும் நீதித்துறையில் பணிபுரியும் சர்வர் ஊழியர், மணல் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய 17 அரசு ஊழியர்கள் என, கடந்த 21ம் தேதி வரை (நேற்று) 45 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: