இயற்கை கொஞ்சி மகிழும் சுற்றுலாத்தலங்களை ஒருங்கிணைத்து பேரெழில் பூமியான தேனிக்கு வருமா பேக்கேஜ் டூர் சிஸ்டம்?

தேனி : இயற்கை எழில் சூழந்த தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களை ஒருங்கிணைத்து, பேக்கேஜ் டூர் ஏற்பாடு செய்தால் மாநில அரசுக்கு வருவாய் பெருகுமென சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் இயற்கை வளமிக்க மாவட்டங்களில் தேனியும் ஒன்று.

 நறுமணப்பொருள்கள் விளைச்சலுடன் இயற்கை அழகை அள்ளிக்கொடுக்கும் குரங்கணி, போடிமெட்டு என முக்கிய சுற்றுலாத்தலங்கள் உள்ளன. தேனி மாவட்டத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் மூணாறு, தேக்கடி உள்ளது. மேலும், கும்பக்கரை அருவி வழியாக சென்றால் முக்கால் மணி நேரத்தில் சென்றடையும் தூரத்தில் கொடைக்கானல் உள்ளது.

அற்புத அணைகள்...

அதுமட்டுமா...? 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் காக்கும் வைகை அணை, அணையையொட்டி சிறுவர் பூங்கா, 126 அடி உயர சோத்துப்பாறை அணை ஆகியவையும் சுற்றுலாப்பயணிகளை கவர்கிறது. மேகமலை கடல் மட்டத்தில் இருந்து 500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இயற்கையான தாவரங்கள் மற்றும் வனவிலங்குகளையும் பல்வேறு வகையான பறவையினங்களையும் மேகமலையில் காண முடியும்.

தேயிலைத்தோட்டங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும். அவ்வப்போது வழிமறிக்கும் யானைகள் புல்லரிக்கச் செய்யும். முன்செல்லும் வாகனங்கள் தெரியாத வகையில் மேகக் கூட்டங்கள் சாலைகளில் படர்ந்து கொள்வது கண்கொள்ளா காட்சியாகும். மேகமலையில் முன்பு திமுக ஆட்சியின்போது கோடைவிழா நடத்திய பெருமை உண்டு. தற்போது மீண்டும் கோடை விழா நடத்தினால் சுற்றுலாப்பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும்.

ஷூட்டிங் ஏரியா...

மேகமலை பகுதியில் இருந்து வரும் ஓடைகளின் மூலமாக வரும் நீர்வீழ்ச்சி சுருளி அருவி என அழைக்கப்படுகிறது. சுமார் 150 அடி உயரத்தில் இருந்து இரண்டு அடுக்குகளாக தண்ணீர் விழுவதும், எங்குபார்த்தாலும் குரங்குகளின் கூட்டமும் சிறுவர்களை குதூகலமடையச் செய்து வருகிறது. இதேபோல வருசநாடு மலைப்பகுதியில் சின்னச்சுருளி அமைந்துள்ளது. பெரியகுளம் நகரில் இருந்து சுமார் 7 கிமீ தொலையில் கொடைக்கானல் மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. இங்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிமுகமான வெண்ணிற ஆடை முதல் பல முன்னணி இயக்குநர்களின் படங்களின் ஷூட்டிங் இங்கு நடந்துள்ளது.

குதூகலிக்க வைக்கும் குரங்கணி

போடியில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவில் குரங்கணி உள்ளது. இங்கு விளையும் நறுமண பொருட்களின் விளைச்சல், கொட்டக்குடி ஆறு, ஓங்கி உயர்ந்த மரங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும். குரங்கணிக்கு மேல்பகுதியான போடி மெட்டு செல்லும் சாலையில் உள்ள ஹேர்பின் பெண்டு வளைவுகளுடன் கூடிய மலைச்சாலை மாறுபட்ட அனுபவத்தை தரும்.

ஆன்மிகத்தலங்கள்

இயற்கை எழில் சூழ்ந்த இடங்கள் ஒருபுறமிருந்தாலும், ஆன்மீகத் தலமான சனீஸ்வர பகவான் சிறப்பு தலமான குச்சனூர் சனீஸ்வரர் கோயில், ராகு, கேது தலமான உத்தமபாளையம் ஞானம்மன் திருக்கோயில், பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்கள் உள்ளன.

மதுரையில் இருந்து 80 கிமீ தொலைவில் உள்ள தேனி நகருக்கு வந்துவிட்டாலே சுற்றுலாபயணிகள் தங்கிக்கொள்ள அவரவர் வசதிக்கேற்ற சாதாரண நிலையிலான தங்கும் விடுதிகள் முதல் நட்சத்திர ஹோட்டல்கள் வரை ஏராளமானவை உள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த சுற்றுலாத்தலங்களை பார்வையிடுவதற்கு தனியாக சுற்றுலா வாகனங்கள் இல்லை. அதுமட்டுமின்றி கடந்த அதிமுக ஆட்சியில் தேனி மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக்கு எதுவுமே செய்யவில்லை.

எனவே, தமிழக அரசு சுற்றுலாத்துறை மூலமாக சிறப்பு வாகனங்கள் அமைக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். தேனி மாவட்ட முக்கிய இடங்களை ஒருங்கிணைத்து ஒரு பேக்கேஜ் டூர் ஆக ஏற்பாடு செய்ய வேண்டும். ஒன்றிரண்டு நாட்களில் தங்கி சுற்றுலாத்தலங்களை பார்வையிடும் வகையில் வாகன வசதிகளை செய்து கொடுத்தால் இங்குள்ள சுற்றுலாத்தலங்கள் மேம்படும். அரசுக்கும் வருவாய் பெருகும் என தேனி மாவட்ட மக்கள், சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குளுகுளு பூமிக்கும் போகலாம்...

தேனியில் இருந்து காட் ரோடு வழியாக சென்றால் 80 கிமீ தூரமும், பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாக சென்றால் 55 கிமீ தொலைவிலும் கொடைக்கானல் உள்ளது. வத்தலக்குண்டுவில் இருந்து வரும் தூரத்தை விட குறைவான தூரத்தில் கொடைக்கானலுக்கு செல்லலாம். ஒரு டூர் பிளானில் 2 மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தலங்களை பார்வையிடும் பாக்கியம் கிடைக்கும்.

அப்படியே கேரளாவுக்கும்...

கேரள மாநிலத்தில் அமைந்திருந்தாலும், பழைய பெரியகுளம் தாலுகாவின் ஒரு பகுதியான மூணாறு, தேனியில் இருந்து 80 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. தேயிலை தோட்டங்கள், ஏலம், மிளகு, கிராம்பு உள்ளிட்ட நறுமணப்பயிர்கள் விளையும் பூமியான மூணாறில் சுற்றிப்பார்க்க ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன. இங்கு காணப்படும் வரையாடுகள் சிறப்பானவை. தமிழக எல்லைநகரான குமுளியில் இருந்து 4 கிமீ தொலையில் தேக்கடி அமைந்துள்ளது. இங்கு படகு சவாரி பிரபலம்.

Related Stories: