வந்ததும் தெரியல..போனதும் தெரியல..!: கொரோனாவை வெற்றிகரமாக வீழ்த்தியதாக அறிவிக்க தயாராகும் வடகொரியா..!!

சியோல்: கொரோனா தொற்றில் இருந்து வெற்றிகரமாக மீண்டுவிட்டதாக அறிவிக்க வடகொரியா தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா பரவத் தொடங்கியது. கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து வரும் நிலையில் உலகம் முழுவதும் பல கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஆனால் வடகொரியா மட்டும் தங்களது நாட்டில் கொரோனா ஏற்படவில்லை என கூறி வந்தது. இதனிடையே, வடகொரியாவில் முதன்முதலாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கடந்த மாதம் 8ம் தேதி உறுதியானது.

அங்கு கொரோனா தொற்று தினமும் எத்தனை பேருக்கு பரவியது என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இதையடுத்து, வடகொரியாவில்  கொரோனா வைரஸ் பரவல் இருப்பதாக அதிபர் கிம் ஜாங் உன் கடந்த மாதம் 12ம் தேதி முதல் முதலாக ஒப்புக்கொண்டார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கத்தை அறிவித்தார். ஆனால் கொரோனா தடுப்பூசியோ முறையான சிகிச்சைகளோ வடகொரியாவில் இல்லாததால் அங்கு நாள்தோறும் 1 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதாகவும், கொரோனா பாதிப்பு தொடர்பான உண்மையான தகவல்களை வடகொரியா மறைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இருந்தபோதிலும் பொது முடக்கத்தை தீவிரமாக பின்பற்றி பாரம்பரிய சிகிச்சை முறைகளை வடகொரிய மக்கள் கடைபிடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கொரோனா உயிரிழப்பு வடகொரியாவில் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வடகொரியா கொரோனா தொற்றில் இருந்து வெற்றிகரமாக மீண்டுவிட்டதாக அறிவிக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: