×

ஏலகிரி மலையில் அரசு பழங்குடியினர் விடுதியில் உணவு கிடைக்காமல் மாணவர்கள் அவதி-கலெக்டர் ஆய்வு

ஜோலார்பேட்டை : ஏலகிரி மலையில் அரசு பழங்குடியினர் மாணவர் தங்கும் விடுதியில் மாணவர்களுக்கு சரியான உணவு கிடைப்பதில்லை என மாணவர்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளதையடுத்து மாவட்ட கலெக்டர் விடுதியிலும் உண்டு உறைவிட பள்ளியிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஏலகிரி மலையில் உள்ள அத்தனாவூர் அரசு பழங்குடியினர் மாணவர் விடுதி சுமார் 65 வருடத்திற்கும் மேலாக இருந்து வருகிறது. இங்குள்ள விடுதியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் தாழ்த்தப்பட்ட,  மலைவாழ், பிற்படுத்தப்பட்ட  மாணவர்கள் என சுமார் 50-க்கு மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு சரியான உணவு வழங்குவதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:விடுதியில் சமையலராக உள்ள  நபர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சமையலர் ஆக வந்தார். அவர் வந்ததிலிருந்து சரிவர விடுதிக்கு வருவதில்லை. மேலும் சமையலும் செய்து கொடுப்பதில்லை. இதுகுறித்து விடுதியின் வார்டனிடம் சொல்லலாம் என்றால் அவரும் விடுதிக்கு சரியாக வருவதில்லை. எப்போதாவது ஒருமுறைதான் வருகிறார். அந்தநேரத்தில் அவரிடம் முறையிட்டால் சம்பந்தமே இல்லாமல் உண்டு உறைவிடப் பள்ளியில் வாட்ச்மேனாக உள்ள நபரிடம் போய்க் கேளுங்கள் என்று கூறுகிறார். வாரத்திற்கு ஒரு கிலோ அளவிற்கு மட்டுமே காய்கறிகளை வாங்கி கொடுக்கிறார். இதனால் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆரோக்கியமான உணவு கிடைக்காமல் அவதிப்படுகிறோம். அதுமட்டுமின்றி எங்கள் விடுதியில் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்ய வருபவர் நபர்தான் தற்போது  எங்களுக்கு சமைத்து கொடுக்கிறார்.

அதுவும் அவருடைய வேலையை செய்து முடித்து விட்டு காலதாமதமாக சமையல் செய்து கொடுப்பதால் சரியான நேரத்திற்கு  எங்களால் சாப்பிட முடிவதில்லை. எங்கள் விடுதியில் ஒரு வார்டன், 2 சமையல்காரர், ஒரு வாட்ச்மேன், சுத்தம் செய்ய ஒருவர் என மொத்தம் 5 பேர் இருக்க வேண்டும். தற்போதைக்கு இரண்டு பேர் மட்டுமே உள்ளனர். எனவே எங்களுடைய குறைகளை மாவட்ட கலெக்டர் கவனத்தில் கொண்டு நாங்கள் ஆரோக்கியமான உணவு சாப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையடுத்து மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா நேற்று முன்தினம்  விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சமையல் அறை, மாணவர்களுக்கு சமைத்த உணவு, பொருட்களின் இருப்பு போன்றவற்றை பார்வையிட்டு மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் மாணவர்களின் குற்றச்சாட்டு குறித்து வார்டன் சகாயராஜிடம் கேட்டு அட்டவணையில் உள்ளபடி நாள்தோறும் உணவு சமைத்துக் கொடுக்கும் படியும், மாணவர்கள் தங்கும் அறை, சாப்பிடும் அறை, சமையல் அறை உள்ளிட்ட இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் எச்சரித்தார்.

இதனைத் தொடர்ந்து பழங்குடியினர் மாணவர் விடுதியின் அருகே உள்ள ஆதரவற்றோர் உண்டி உறைவிடப் பள்ளியில் கலெக்டர் ஆய்வு செய்தார். அங்குள்ள மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து அங்குள்ள இருப்பு அறைக்குச் சென்று பொருட்களின் இருப்பு விவரங்கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பழங்குடியினர் நல திட்ட அலுவலர் ராஜஸ்ரீ, ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags : Avadi-Collector ,Government Tribal Hostel ,Yelagiri Hills , Jolarpet: Students are not getting proper food at the Government Tribal Student Hostel in Yelagiri Hills.
× RELATED ஏலகிரிமலையில் அதிகாரிகள் துணையுடன் 300...