கோவையில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு; கட்டடங்களின் முகப்பு தோற்றம் எழில் மிக்கதாக இருக்க வேண்டும்: அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை

சென்னை: கோவையில் மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். கோயமுத்தூர் மண்டலத்தில் பொதுப்பணித்துறையால், மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று (22.6.2022) தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எல்லாம் உடனடியாக மதிப்பீடு தயார் செய்து, நகர ஊரமைப்பு இயக்ககம் (DTCP) மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழுமம் (CMDA) ஆகியவற்றின் அனுமதி பெற்று பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

மதிப்பீடு தயார் செய்யும்போது, அனைத்து தேவைகளையும் உள்ளடக்கி மதிப்பீடு தயார் செய்ய வேண்டும். திருந்திய நிர்வாக அனுமதி (RAS) 10% சதவீதம் வரை சில தவிர்க்க முடியாத இனங்களில் மட்டுமே ஏற்கப்படும். நிலம் கையகப்படுத்த காலதாமதம் ஏற்பட்டால், உடனடியாக உயர் அலுவலர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். கல்வித்துறையின் கட்டடங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, கட்டடங்களின் உறுதித்தன்மையைப் பொறுத்து இடித்துவிட்டு, புதிய கட்டடங்கள் கட்ட வேண்டுமென்றால், உரிய கருத்துரு அரசுக்கு அனுப்ப வேண்டும். இனிமேல், புதிய கட்டடங்கள் கட்டும்போது,

முகப்பு தோற்றம் (Front Elevation) எழில்மிக்கதாக இருக்க வேண்டும் என்றும், அதற்காகவே முதலமைச்சர் அவர்கள், அரசு ஆரம்ப சுகதார நிலையங்கள், பள்ளிக் கூடங்கள், சார்-பதிவாளர் அலுவலகங்கள், மாணவ-மாணவியர் தங்கும் விடுதிகள், நகர் ஊரமைப்பு இயக்கக அலுவலகங்கள் ஆகியவற்றின் புதிய முகப்பு தோற்றத்தை வெளியிட்டுள்ளார்கள்.  இனிமேல், கட்டப்படும் ஒவ்வொரு அலுவலகங்களும், இந்த முகப்பு தோற்றத்தின்படியே இருக்க வேண்டும். புதிய கட்டடம் கட்டும்போது, ஒப்புதல் அளிக்கப்பட்ட வரைப்படம் (Approved Plan), 2 இலட்சம் சதுர அடிக்குமேல் இருந்தால், சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் பெற்றுதான்,

கட்டடங்கள் கட்ட வேண்டும். இதற்கு சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சி (ITI), கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை தொடங்கும்போது, கவனமுடன் தரத்தை உறுதிசெய்யப்பட வேண்டும். ஒப்பந்தாரர்கள் தேர்வு செய்யும்போது, அவர்களுடைய திறனை ஆய்வு செய்ய வேண்டும். கோயமுத்தூர் மண்டலத்தில் பணித்தளம் தேர்வு செய்யப்படவேண்டிய இனங்களில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 2022-2023 ஆம் ஆண்டில், அனைத்துத்துறை அமைச்சர்களின் அறிவிப்புகளின்படி,

கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக ஆய்வு செய்தார்கள். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை, வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, திருப்பூர் மாவட்டத்தில் கல்லூரிகளின் விடுதி கட்டடங்கள் வணிகவரி மற்றும் பதிவுத்துறை, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, சட்டத்துறை, போக்குவரத்துத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை, பள்ளிக்கல்வித்துறை ஆகியவற்றின் அறிவிப்புகள் தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொண்டார். பொதுப்பணித்துறையால், கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவத்துறை பணிகள் தொடர்பாக தனியாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அவர்கள்,

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள் கூடுதல் கட்டடங்கள் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் விரைவாக செய்ய வேண்டும். பொது மக்களின் பயன்பாட்டினை கருதி இத்தகைய பணிகள் காலதாமதம் இல்லாமல் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஆணையிட்டார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.தயானந்த் கட்டாரியா இ.ஆ.ப., முதன்மைத் தலைமைப் பொறியாளர் திரு.இரா.விஸ்வநாத், கோயமுத்தூர் மண்டல தலைமைப் பொறியாளர் திரு.இரா.இளஞ்செழியன் மற்றும் கோயமுத்தூர் மண்டல அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

Related Stories: