×

சித்தூர், திருப்பதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்-பல்வேறு ஆசனங்கள் செய்து அசத்தினர்

சித்தூர் : உலக யோகா தினத்தை முன்னிட்டு சித்தூர் மெசானிக் விளையாட்டு மைதானத்தில் உள்ள அரங்கில் நேரு யுவகேந்திரா சார்பில் நேற்று யோகா பயிற்சி நடைபெற்றது.
 பின்னர், நேரு யுவகேந்திரா திட்ட அதிகாரி பிரதீப் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி முதன்முதலில் யோகா பயிற்சியை உலக பயிற்சி தினமாக கொண்டாட வேண்டும் என ஐநா சபையில் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி ஐநா சபை உலகத்திலுள்ள அனைத்து நாடுகளையும் வாக்கெடுப்பு நடத்த பரிந்துரை செய்தது. அதில் 199 நாடுகளில் 173 நாடுகள் உலக யோகா தினத்தை கடைபிடிக்க ஒப்புதல் அளித்தது. அதனை அடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21ம் தேதி யோகா தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

யோகா செய்தால் உடல் ஆரோக்கியமாகவும், நோய் நொடி இல்லாமல் வாழலாம். நாள்தோறும் குறைந்தது அரை மணி நேரமாவது யோகா பயிற்சியில் ஈடுபட்டால் சர்க்கரை நோய், பக்கவாதம், ரத்தக்கொதிப்பு, கேன்சர், இதய நோய்  உள்ளிட்ட நோய்களிலிருந்து விடுபடலாம். ஆகவே பொதுமக்கள் மாணவ-மாணவிகள் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் யோகா பயிற்சியில் ஈடுபடலாம். இதற்கு வயது வரம்பு கிடையாது. அதேபோல் நேரு யுவகேந்திரா திட்டத்தின் மூலம் இலவசமாக யோகா பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே யோகா பயிற்சியில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் நேரு யுவகேந்திரா அலுவலகத்திற்கு வந்து பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக யோகா பயிற்சியின்போது, பல்வேறு சாகசங்களை யோகா ஆசிரியர்கள் செய்தனர்.

திருப்பதி: திருப்பதி பைபாஸ் சாலையில் உள்ள பிரகாசம் பூங்காவில் மாநகராட்சி மேயர் சிரிஷா தலைமையில் நேற்று யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, மாணவ, மாணவியர்கள் பல்வேறு விதமான யோகாசனங்களை செய்தனர். இதேபோல், திருப்பதியில் உள்ள சமஸ்கிருத தேசிய பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ராதா காந்த் தாகூர் உள்ளிட்டோர் வளாகத்தில் உள்ள யோகா குரு பதஞ்சலி மகரிஷி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பின்னர் மாணவர்களின் யோகா விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதேபோல் திருப்பதி வெங்கடேஸ்வரா அரசு மருத்துவக் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கல்லூரி முதல்வர் சந்திரசேகரன் தலைமையில் கொண்டாடப்பட்டது. அப்போது அவர் பேசுகையில், யோகா பயிற்சி செய்வதால் உடல், மனம் ஆன்மாவுக்கு அமைதியைத் தரும். மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழ முடியும். யோகா நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதோடு பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும். இதில், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : International Yoga Day ,Chittoor, Tirupati , Chittoor: On the eve of World Yoga Day, Nehru Yuvakendra practiced yoga at the Chittoor Masonic Stadium yesterday.
× RELATED இளைஞர்களிடம் விளையாட்டை...